கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சர்வதேச அளவில் பங்காற்றிய இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் உள்ளவர்களுக்குத் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன.
இதில், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு ஆகும். உள்நாட்டு தேவை போக, உபரியாக இருக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கும் சீரம் நிறுவனம் ஏற்றுமதி செய்து வந்தது. பொருளாதாரத்தில் நலிவடைந்த 64 நாடுகளுக்கு இந்த மருந்துகளை இந்தியா அனுப்பியது.
இந்தியாவில் மார்ச் மாதம் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடியதால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அரசு முடுக்கிவிட்டது.
கொரோனா பரவல் அதிகரிப்பதால் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் கணிசமாகத் தேவைப்படும் என்பதால் கொரோனா தடுப்பு மருந்தின் ஏற்றுமதியை ஏப்ரல் மாதத்தில் இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது.
இந்த நிலையில் இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் பங்கேற்கும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் 94.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வாஷிங்டனில் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ்சை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் பருவநிலை மாற்ற பிரச்சினையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
இந்தியாவில் செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக நிர்மலா சீதாராமனிடம் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டு தெரிவித்தார். தடுப்பூசி உற்பத்தியிலும், விநியோகத்திலும் இந்தியாவின் சர்வதேச பங்களிப்புக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.
**-ராஜ்**
.
�,