பெண் எஸ்.பி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், சிறப்பு டிஜிபியின் உத்தரவின் பேரில்தான் செயல்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்பி கூறியதற்கு, உயர் அலுவலர்கள் கொலை செய்ய சொன்னால் அதையும் நீங்கள் செய்துவிடுவீர்களா என்று நீதிபதி கடுமையாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் புகார் அளித்தார். இதுதொடர்பாக, சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பியாக இருந்த கண்ணன் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், சிபிசிஐடி காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க மறுத்த விழுப்புரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி இடைநீக்கம் செய்யப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று(அக்டோபர் 20) நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி. தரப்பில் உயர் அதிகாரி என்ற முறையில் கூடுதல் டிஜிபி அறிவுறுத்தலின்படியே தான் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வேல்முருகன், பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். காவல்துறையிலேயே அவ்வாறு நடத்தப்படாதது அவமானகரமானது என்று தெரிவித்தார். உயர் அதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா என கேள்வி எழுப்பியதுடன், உயர் அதிகாரிகளே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து வழக்கை வாபஸ்பெறுவதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விழுப்புரம் நீதிமன்ற வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், விசாகா குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ ஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும் குற்றம்சாட்டி, அதன் விசாரணைக்கு தடைகோரி சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளார். குழு விசாரணையை முடித்த 10 நாட்களில் தனக்கு அளிக்கப்பட வேண்டிய அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை இன்று(அக்டோபர் 20) விசாரித்த நீதிபதி சி.சரவணன், மனு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,