Qபுதிதாக 10 கல்லூரிகள்: பொன்முடி

Published On:

| By admin

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று (ஏப்ரல் 11) உயர்கல்வித் துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
அதில் தமிழகத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்கா தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்த முக்கிய அறிவிப்புகள்…
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 4,800 மாணவர்கள் மற்றும் 500 ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதிகள் கட்டித்தரப்படும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவிகளுக்கு ரூ.22.22 கோடி மதிப்பீட்டில் இரண்டு விடுதிகள் கட்டித்தரப்படும்.
அதுபோன்று அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் ரூ.49.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள காஜாமலை வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகளிர் விடுதி கட்டித்தரப்படும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்த ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாடப்பிரிவு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி பூங்கா நிறுவப்படும். இதன் மூலம் 20,000 இளநிலை/முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன் பெறுவர்.
அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொண்டி வளாகத்தில் கடல்சார் விளையாட்டு மையம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் டிப்ளோமா படித்தவர்களுக்குப் பணி புரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் கொண்டுவரப்படும்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 10 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும்.
குடவாசல், காட்டுமன்னார்கோவில், ராமேஸ்வரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஜெயங்கொண்டம், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்குக் கட்டடங்கள் கட்டப்படும்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குக் கட்டடங்கள் கட்டப்படும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பாடப்பிரிவு செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் முதுகலை படிப்பதற்கும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் முதுகலை வணிகவியல் பாடப்பிரிவு நடப்பு கல்வியாண்டில் தொடங்கப்படும்.
மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ரூ.166.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
அரசு கல்லூரிகளில் ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் நவீனப்படுத்தப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் மையம் நிறுவப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share