ஸ்ரீராம் சர்மா
சென்ற கட்டுரையில், வேதம் என்பதை ஆழ்ந்த அறிவு எனக் கண்ட பின் அதை மேலும் விரித்துரைக்க வேண்டியதில்லை!
OLD IS GOLD என ஆங்கிலத்தில் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனம், அதனையே தமிழ்ப்படுத்திச் சொன்னால் பழைமை வாதம் எனப் புறந்தள்ளி விடுவது உளவியல் சிக்கலேயன்றி வேறில்லை !
பாப்பா பாட்டில்… நீதியும், உயர்ந்த மதியும், கல்வியும் உடையதிந்த நாடு என பிறந்த மண்ணின் உச்சி முகர்கிறார் பாரதியார் !
நடிகரும் – நாடறிந்த பேச்சாளருமான சிவகுமார் அவர்கள் ஒருமுறை என்னிடம், அவரது நான்காம் வகுப்பு ஆசிரியர் கல்யாண சாமி நாயுடு ஐயா அவர்கள் கேட்ட கணக்கு ஒன்றைச் சொல்லி,
“சரியான விடையை, யாரிடமும் கேட்காமல் சொந்த அறிவோடு சொன்னால் ஆயிரம் ரூபாயை ட்ரான்ஸ்ஃபர் செய்வேன்..” என்றார். ஆனவரை முயன்று, முடியாமல் சரண்டர் ஆனேன். கலகலவென சிரித்தார்.
“இதுபோல எத்தனையோ பேர் சரண்டராகி இருக்காங்கப்பா.. மூணே மூணு பேருதான் இதுக்கான சரியான பதிலை சொல்லி என்கிட்ட பரிசு வாங்கியிருக்காங்க. அன்றைய எங்களது கல்விக்கும் – இன்று டெக்கி ஜெனரேஷனாக சீன் போடும் உங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான். புரிஞ்சுக்குங்கடா தம்பிகளா…” என்றார்.
அந்தப் பொல்லாத கணக்கு இதுதான்.
**கால் அரைக்கால் காசுக்கு நாலரைக்கால் கத்தரிக்காய் என்றால் ஒரு காசுக்கு எத்தனை கத்தரிக்காய் ? **
இதற்கான விடையை சாதாரண சிலேட்டுப் பலகையில் எழுதிப் படித்த சிவகுமார் சாரின் பள்ளிக்காலம் என்பது சற்றேறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முந்தையதுதான். ஆனால், அதற்கான விடையை இன்றைய சராசரி மனித அறிவினால் எட்ட முடியவில்லையே !
எனில், நூற்றாண்டுக் காலம் முன்பதாக இந்த மண்ணில் இருந்த கல்வியின் தரம் எத்தகையது ?
அதற்கும் முந்தைய சேர, சோழ, பல்லவ கால அறிவின் மாட்சி எத்தகையது ? அதற்கும் முந்தைய, வரலாற்று ஆன்றோர்களும் – சான்றோர்களும் வாழ்ந்த சங்க கால கணக்கறிவுதான் எத்தகையது ?
அதனினும் முன்னோரின் அகண்டக் கணக்கு வழக்குகளெல்லாம் எத்தகையதாக இருந்திருக்கும் ? சிந்தித்தாக வேண்டும் அல்லவா ?
குறித்துக் கொள்ளுங்கள். எல்லாமே கணக்கின் அடிப்படையில்தான் !
ராஜராஜ சோழனின் தஞ்சை கோபுரக் கட்டுமானம் – பிதோவன் இசை – இளையராஜாவின் மயக்கும் சங்கீதம் – பாலக்காடு மணிஐயர் , திருச்சி சங்கரன், குரு பழனியாப் பிள்ளையவர்களின் மிருதங்க தனியாவர்த்தனம் போன்றவைகள் அனைத்துமே கணக்கின் அடிப்படையில் விளைந்த அற்புதங்கள் தான் !
என்னளவில் சொல்கிறேன்…
“புலவர்க்கு வெண்பா புலி” என்பார்கள். ஆயினும், அதன் தாள கணக்கையும் – அதிலடங்கும் விடுகை குறித்தும் எளிதாக விளக்கி, ஆர்வமுள்ள ஒருவரை பத்தே நிமிடத்தில் வெண்பா எழுத வைக்க என்னால் முடியும். எல்லாமே கணக்கு ! இலக்கணம் என்பது கணக்குதான் !
ஆனால், அதில் ஜனரஞ்சக இலக்கியத் தன்மையை புகுத்தி வெற்றி காண்பதென்பது அவரவர் தனித்திறன் ! வள்ளுவனும், கம்பனும், இளங்கோவும், ஆண்டாளும், பாரதியும், கண்ணதாசனும் கண்டதைப் போல…
விஷயத்துக்கு வருவோம் !
அப்படியான அந்தக் கணக்கைக் கொண்டு அகண்ட பிரம்மாண்டமான இந்தப் பேரண்டத்தை அளவிட்டுவிட முடியுமா ? முடியும் எனக் கண்டு, அதில் வெற்றியும் கண்டு கொண்டிருப்பவர்தான் வேதிக் ராமச்சந்திரன்.
ஆனால், அவர் போட்டுச் சொல்லும் கணக்குகள் மேற்கண்டது போல சாதாரண கணக்குகள் அல்ல. அவை, பெருமூச்சுக்கும் – அழையாப் பொறாமைக்கும் தீனியிடும் பொல்லாக் கணக்குகள் !
ஆம், உலக வானிலை நிறுவனங்கள் எதனாலும் கண்டு கொள்ள முடியாதபடிக்கு – எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியாதபடிக்கு – ஆழ்ந்து விரிந்து நிற்கும் ஆச்சரியங்கள் அவரது கணக்குகள் !
இந்த வருட மார்கழியின் இறுதி நாட்களில் வெப்பம் அதிகமிருக்கும், வைகுண்ட ஏகாதசியில் சென்ற ஆண்டைப் போல மழை இருக்காது என்பது வரை நுணுக்கமாக ஒரு வருடத்துக்கு முன்பே அடித்துச் சொல்லி நிரூபித்தும் காட்டுகிறார்.
அவரது வேத விஞ்ஞானத்தின் வானிலை முன்னறிவிப்புகள் அவ்வப்படியே நடக்கிறது. ஏதோ சோழி உருட்டிச் சொல்பவரில்லை.
உலக வானிலை குறித்த தனது கணிப்புகளுக்கான வேத விஞ்ஞானத் துல்லியத் தரவுகள் அனைத்தையும் அவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.
அது குறித்து, அவரை அண்டி பேட்டியெடுக்காத மீடியாக்களே இங்கு இல்லை எனலாம். அவரது வேத விஞ்ஞான ஆய்வுக் கணிப்புகளைத் தாங்கிய நூற்றுக்கணக்கான வீடியோக்கள் யூ ட்யூபில் உள்ளன.
நாளுக்கு நாள் அவரது வேத விஞ்ஞானத்தின் நம்பகத்தன்மை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும்,
வேதிக் ராமச்சந்திரன் எனும் அந்த அறிஞனை ஏன் இந்த அரசாங்கமும், மக்களும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி என்றெல்லாம் வழவழக்க முடியாது.அது ஆழ்ந்த உளவியல் சார்ந்தது.
அவரது எளிய உடையும் தோற்றமும் – மேற்கத்திய வயப்பட்டுப் போன இன்றைய உலகம் நம்ப விரும்புமொரு தோற்றமாக இல்லாததும் காரணமாக இருக்க முடியும் என எண்ணுகிறேன் !
எனக்கவர் நல்ல நண்பர் என்பதால், அது குறித்து பலமுறை அவரை கடிந்து கொண்டும் சொல்லியிருக்கிறேன்..
“வசதியான பில்டர் நீங்க. குறைந்தபட்ச மிடுக்கு உடையை அணிந்து கொண்டாவது பேட்டி கொடுக்கலாமே சார்… இப்படி இருந்தால் எப்படி சார் இந்த உலகம் உங்களை நம்பும் ?”
“அது உலகத்தின் பிரச்சினை சார். உலகம் மாற்றிக் கொள்ளட்டுமே உண்மைக்கு எதுக்குங்க அலங்காரம் ?
முன்னோர்கள் அள்ளித்தந்து போன ஞானச் சொத்தை ஆனவரையில் உள்வாங்கி, என்னளவில் எடுத்துச் சொல்லும் ஒரு கத்துக்குட்டி நான். படித்த திறமையான இளைஞர்கள் பல பேர் இந்த நாட்டுல இருக்காங்க… அவங்களோட சேர்ந்து இன்னமும் துல்லியம் காட்டி விட முடியுமான்னு ஏங்கிக்கிட்டு இருக்கேன். எல்லாம் பகவான் பாத்துப்பார் சார்.’
“அறிவு சார்ந்த ஒன்றில் பகவானை இழுக்கணுமா சார் .?”
“அவரை இழுக்காமல் ஏதுங்க இங்க அறிவு ? ஆதி பகவன் முதற்றே உலகு… உங்களுக்கு எடுத்து சொல்லணுமா ?” என வாயடைக்கிறார்.
“சரி, உங்கள் வேத விஞ்ஞானக் கணக்கை விரித்து சொல்ல முடியுமா…?” என்று கேட்டால்…
“சர்வ சத்தியமாக முடியும். ஆனால், அது அரசாங்கத்தின் சொத்து. அதனால் அவர்களிடம் மட்டுமே அதை ஒப்படைக்க முடியும்…’ எனத் தீர்த்துச் சொல்லி விடுகிறார் வேதிக் ராமச்சந்திரன் !
HAARP அமைப்பை போல இவரும் தன் முடிவுகளை “சீல்டு ப்ராஜக்ட்” ஆக வைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டுக்கும் வித்யாசம் உண்டு அது ப்ரோக்ராம். இது ப்ராஜக்ட் !
சரி, புலி வருது கதையாக சொல்லிக் கொண்டிருக்காமல் – இதன் நம்பகத் தன்மை குறித்த அளவுகோல் ஒன்றை உடனடியாக நிர்ணயித்து விடுவதே சரி என்று எண்ணி அவரிடம் சில தரவுகளைக் கேட்டேன்.
“தேசம் முழுமைக்கும் உலகம் முழுமைக்கும் நீங்கள் சொல்வதை பிறகு கேட்டுக் கொள்கிறோம். இப்போது அடுத்த மூன்று மாதங்களுக்கான தமிழகத்தின் வானிலை குறித்து உங்களால் சொல்ல முடியுமா ?
வரும் மாதங்களில் நமக்கு வரப்போகும் பாதிப்புகள் என்ன ? அதன் வீரியம் என்ன ? அதனால், எந்தெந்த மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படும் ? அந்த பாதிப்புகள் எப்போது விலகும் ? உங்கள் வேத விஞ்ஞானத் தரவுகளை எந்த அளவுக்கு மக்கள் நம்பலாம் ?“
மிகுந்த பணிவோடு, அதே சமயத்தில் கொஞ்சமும் தயக்கமின்றி சொன்னார்….
“சார், நோட் பண்ணிக்குங்க, இயற்கை என்பது மனித அறிவுக்கு அடங்காததொரு பேராற்றல். அதனை 100 சதம் யாராலும் அனுமானித்துவிட முடியாது.
ஆனால், வேத விஞ்ஞானம் சொல்லும் ஒரு கணிப்பை இன்றைய நவீன விஞ்ஞானத்தால் நெருங்கக் கூட முடியாது.
அந்த துணிச்சலில்தான், அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை ஒரு வருடத்துக்கு முன்பே எழுதி வெளியிட்டு விட்டேன். இப்போ இன்னும் கொஞ்சம் துல்லியமா சொல்றேன் கேட்டுக்குங்க…” என அடுக்கத் துவங்கினார் வேதிக் ராமச்சந்திரன்.
**என்னதான் சொல்கிறார் வேதிக் ராமச்சந்திரன் !?**
தனது வேத விஞ்ஞான ஆய்வின் முடிபுகளாக அடுத்த மூன்று மாதங்களுக்கு எட்டு தேதிகளைக் குறிக்கிறார் அவர். அந்த காலகட்டங்களில் மக்களும் – அரசாங்கமும் விழிப்போடு இருந்து கொள்வது நல்லது என்கிறார்.
அதை வரைபடங்களாக தயாரித்து அதில் விவரங்களையும் குறித்து தெளிவாக கொடுத்துவிட்டார்.
**1**
**2**
**3**
**4**
**5**
**6**
**7**
மேற்கண்ட முடிவுகளின் ‘சக்ஸஸ் ரேட்’ என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதன்பிறகு, அவரது கணிப்புகள் குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம் எனத் தோன்றுகிறது.
மேற்கண்ட முடிவுகளில் சுணக்கம் காணப்பட்டால் வேதிக் ராமச்சந்திரன் இன்னமும் கூர்மையாக தன் ஆய்வை மேற்கொண்டாக வேண்டும்.
ஒருவேளை அதன் சக்ஸஸ் ரேட் ஆச்சர்யப்படும்படியாக அமைந்து விட்டால் – இரண்டு அரசாங்கங்களும் அவரது வேத விஞ்ஞான ஆய்வை அங்கீகரித்து – அரவணைத்து – அதைப் பயன்படுத்தி இந்த சமூகத்தைக் காக்க முன்வர வேண்டும்.
எந்த ஒரு விஞ்ஞானமும் மக்களுக்குப் பயன்பட்டாக வேண்டும் என்பதே இந்தத் தொடர் கட்டுரையின் நோக்கம் !
படித்த, அறிவார்ந்த, ஆற்றல் கொண்ட அமைச்சர்களை வழிநடத்தியபடி அயராது உழைக்கும் முதலமைச்சரைக் கொண்ட நமது தமிழ்நாட்டின் அரசாங்கம் – நல்லனவற்றைக் கைகொண்டு மக்கள் நலனைக் காக்கும் என உறுதியாக நம்புவோம் !
**முந்தைய கட்டுரைகள் : **
**1 – [ஹார்ப்பை விஞ்சும் கோளறிவு !?](https://minnambalam.com/politics/2022/01/01/17/planetary-knowledge-beyond-HAARP)**
**2 – [வேதிக் ராமச்சந்திரன்](https://www.minnambalam.com/politics/2022/01/06/21/vedic-ramachandran)**
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
�,”