வாய்ப்புக்காக காத்திருக்கும் டெட் தேர்வர்கள்!

Published On:

| By admin

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியதன் காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் கிராமப்புற இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அதே சமயத்தில் விண்ணப்பிக்கும் வகையில் அதற்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் விண்ணப்பிக்கக் கடைசி தேதிக்கு ஒரு வாரத்திலிருந்து TNTRB இணையதளம் முடங்கியதால் தேர்வுக்குத் தயாரானவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை.

இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், கடைசி ஒருவார காலமாக விண்ணப்பிக்கும் போது சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. விண்ணப்பங்களைப் பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு ஓ.டி.பி.யும் வரவில்லை. சான்றிதழ்களைப் பதிவேற்றவும் முடியாமல் பிரச்சினைகளை எதிர்கொண்டோம். தற்போது கடைசித் தேதி முடிந்து 4 நாட்கள் ஆகிறது. தேர்வுக்குத் தயாராகி வரும் எங்களுக்கு இதுபோன்ற இணையதள பிரச்சினை காரணமாக ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என வேதனையாக இருக்கிறது. எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு வாரிய விண்ணப்ப தேதியினை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை

பி.எட் பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை 18ஆம் தேதி முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share