டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த சர்வதேச விமான சேவை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அனைத்து சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று நவம்பர் 26ஆம் தேதி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்தது.
இதற்கிடையில் உலகநாடுகளில் மாறுபாடடைந்த ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம், சோதனையில் நெகட்டிவ் என்று வந்தாலும் ஒருவாரம் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி அளித்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் அச்சத்தால் உலகளாவிய சூழ்நிலையை பார்த்து, அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இந்தியாவுக்குள் வரும் பயணிகளுக்கு ஏற்கனவே தொடர் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படவிருந்த சர்வதேச விமான சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கான தேதி குறித்து முடிவெடுக்கப்பட்டு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 28ஆம் தேதி நடந்த ஒமிக்ரான் குறித்த ஆலோசனையில் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்குவதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,