Vஇலையைக் கவர தாமரை போடும் கணக்கு!

politics

கோவையில் குவிகிறார்கள் பாரதிய ஜனதா தலைவர்கள். தேசிய செயலாளர் வானதி சீனிவாசன் அங்கேயேதான் வலம் வருகிறார். மாநிலத்தலைவர் முருகன் மாதமிரு முறையாவது அங்கே விசிட் அடித்து விடுகிறார். ஐ.பி.எஸ் அண்ணாமலையையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. சி.பி.ராதாகிருஷ்ணன், ஜி.கே.செல்வக்குமார், எஸ்.ஆர்.சேகர் என மாநில நிர்வாகிகள் பலரும் அங்கேதான் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷண் ரெட்டி இருவரும் அங்கே முகாமிட்டு தொழில்முனைவோர், அறிவுஜீவிகள் என பலரையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத்தும் கோவைக்கு வந்து பலரையும் சந்தித்து விட்டு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுச் சென்றிருக்கிறார். உச்சமாக வரும் 25ஆம் தேதியன்று கோவைக்குப் பிரதமர் மோடி வருகிறார்.

ஊர்வலம், நலத்திட்ட உதவி, முகாம், கலந்துரையாடல், சந்திப்பு, பேட்டி என்று பாரதிய ஜனதா சார்பில், தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி, கோவையின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டே இருக்கிறது. கறுப்பு – சிவப்பு மற்றும் கறுப்பு – சிவப்பு – வெள்ளைக் கொடிகளுக்குப் போட்டியாக காவிக் கொடிகளும் பறக்கின்றன. ஒருபுறத்தில் அதிமுக சார்பில் முதல்வர் இபிஎஸ் இரண்டு நாள் பிரசாரம், இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து பங்கேற்ற பிரமாண்ட திருமண விழா, விளையாட்டுப் போட்டிகள். ஜல்லிக்கட்டு என்று அதிமுகவும் அதகளமாக தேர்தல் பணிகளைத் தீயாகச் செய்து கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மகளிரணி தலைவர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி என மாறி மாறி கோவையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரப்புரை செய்து கொண்டேயிருக்கிறார்கள். மொத்தத்தில் மாசிப்பனிக்கு மத்தியிலும் அரசியல் சூட்டில் கொதிக்க ஆரம்பித்திருக்கிறது கோவை.

இப்படி எல்லோரும் கோவையைக் குறிவைத்து அரசியல் செய்து கொண்டிருந்தாலும், பாரதிய ஜனதாவின் தலைவர்கள் அங்கே இப்படிப் படையெடுப்பது, திமுக, அதிமுக இரண்டு கட்சியினருக்குமே கலக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

கோவையில் மட்டும் இவ்வளவு தலைவர்கள் குவிவதற்கான காரணமென்ன என்பது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்தார்…

**‘‘கோவையில் நாங்கள் மிக அதிகமான கவனம் செலுத்துகிறோம் என்பது உண்மைதான். அதற்குக் காரணம், இங்கேதான் எங்கள் கட்சி கொஞ்சம் காலூன்றி இருக்கிறது. கட்டமைப்பும் இருக்கிறது. அதைவிட அதிமுக மிகவும் வலுவாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளால் எக்கச்சக்கமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இங்கே எத்தனை தொகுதி கிடைத்தாலும் அத்தனை தொகுதியிலும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் எப்படியாவது கோவையில் அதிகத் தொகுதிகளைக் கேட்டு வாங்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறோம்.**

ஆனால் சும்மா போய்க் கேட்டால், அதிமுகவில் கொடுக்க மறுத்து ஏதாவது காரணம் சொல்வார்கள். அவர்கள் கட்சியிலும் நிறைய எதிர்ப்புகள் கிளம்பும் என்பது எங்களுக்குத் தெரியும். முதலில் எங்களுடைய ‘வெயிட்’டைக் காண்பித்துவிட்டு அதற்குப் பிறகு, அதிக சீட்டுகள் கேட்டுப் பேசலாம் என்று நினைக்கிறோம். பிரதமர் கோவைக்கு வரும் நிகழ்ச்சிக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து ஒரு லட்சம் பேரைத் திரட்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அந்தக் கூட்டத்தைக் காண்பித்துவிட்டு, அதற்குப் பின்புதான் சீட்டுகளைப் பற்றிப் பேசப் போகிறோம்.

கோவையில் எத்தனை சீட்டுகள் கேட்டாலும் ஒரு சீட்டுதான் கொடுக்கப்போவதாக அதிமுக நிர்வாகிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார் அல்லது சூலூர் என மூன்று தொகுதிகளைத்தான் நாங்கள் கேட்கப் போகிறோம். இவற்றில் எப்படியும் இரண்டு சீட்டுகளை வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவற்றைத் தவிர்த்து, நீலகிரியிலுள்ள மூன்று தொகுதிகளில் ஊட்டி தொகுதியையும் கேட்கப் போகிறோம். திருப்பூரில் எந்தத் தொகுதியையும் கேட்கவில்லை. ஒரு வேளை கொடுத்தால் அங்கேயும் போட்டியிடத் தயாராகத்தான் இருக்கிறோம்!’’ என்றார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம், கோவை – கரூர் எக்ஸ்பிரஸ் வே, கோவை மெட்ரோ ரயில் ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி, கோவையிலிருந்து பொள்ளாச்சி, திருப்பூர், பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு பாசஞ்சர் ரயில்கள், மதுரை, பெங்களூருக்குக் கூடுதல் ரயில்கள் என மத்திய அரசிடம் ஏராளமான கோரிக்கைகளை அங்குள்ள தொழில் அமைப்பினர் முன் வைத்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தில் பாரதிய ஜனதா இருப்பதால், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கிறது. ஒருவேளை இந்த வாக்குறுதிகள் தரப்பட்டால் அது தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தையும் வரவேற்பையும் தருமென்பது நிச்சயம்.

அதேநேரத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையுயர்வு போன்ற விஷயங்களை, பரப்புரையில் தீவிரமாக எடுத்துச் சொல்வதென்று திமுக கூட்டணியிலுள்ள கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே அங்கு தொழில் பாதிப்பு, வேலையிழப்பு அதிகமுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வெறும் வளர்ச்சித் திட்டங்களால் என்ன பலன் கிடைக்குமென்ற கேள்வியையும் எதிர்க்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் முன் வைக்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய கோவையில் முக்கியமான தொழில் அமைப்பின் நிர்வாகி ஒருவர், ‘‘அதிமுகவும், பாரதிய ஜனதாவும் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியே அதிகம் பேசுகின்றன. தனிநபர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், சமூக பாதிப்புகள் பற்றி பேசுவதேயில்லை. விலைவாசி உயர்வு இந்தத் தேர்தலில் நிச்சயமாக பெரும் பங்காற்றும். எங்களைப் போன்ற சிறு தொழில்முனைேவோர், மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம். கோவையில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைய நடப்பதாகக் கூறினாலும், தொழில் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையாகவுள்ள விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய, மாநில அரசுகள் எதுவுமே செய்யவில்லை. இதை மட்டும் செய்திருந்தால் இன்றைக்கு பல நிறுவனங்கள், கோவையில் கால் பதித்திருக்கும். அதனால் எங்களுடைய தொழிலுக்கும் நல்ல ஊக்கம் கிடைத்திருக்கும். அதைச் செய்யாமல், பாலங்கள் கட்டுவதாலும், குளங்களை மேம்படுத்துவதாலும் தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரிதாக என்ன நன்மை கிடைத்துவிடும். இந்தத் திட்டங்களுக்காக பாரதிய ஜனதா ஜெயிப்பதாக இருந்திருந்தால், நாடாளுமன்றத் தேர்தலிலேயே அந்தக் கட்சியின் வேட்பாளர் கோவையில் ஜெயித்திருக்க முடியுமே… அப்போது நடந்ததை விட இப்போது அதிகமான திட்டங்கள் நடப்பதாகக் கூறலாம். ஆனால், அப்போது இருந்த பாதிப்புகளை விட இப்போது பாதிப்புகளும் மிகவும் அதிகமாகியிருக்கின்றன. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கோவையைப் பொறுத்தவரை, பாரதிய ஜனதாவுடன் அதிமுக இணைவதால் அந்தக் கட்சிக்குதான் பலவீனம்!’’ என்றார்.

**தாமரையை இலை மலர வைக்குமா… இலையைத் தாமரை மூழ்கடிக்குமா… விடை காலத்தின் கையில்!**

**–பாலசிங்கம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0