iஎதற்காக உயிரைத் தர வேண்டும் ஒரு தலைவர்?

Published On:

| By Balaji

ராஜன் குறை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நான்காண்டுகளில் முதல் முறையாக வீரஞ்செறிந்த பேச்சொன்றைப் பேசியுள்ளார்: “என் உயிரையும் கொடுப்பேன்” என்று. எந்த உயரிய லட்சியத்திற்காக உயிரைக் கொடுக்கப் போகிறார் என்பதுதானே உங்கள் மனதில் எழும் கேள்வி? அ.இ.அ.தி.மு.க-வை ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமர வைக்கும் உயரிய லட்சியத்துக்குத்தான் உயிரையும் கொடுப்பேன் என்று சூளுரைத்துள்ளார். தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால் அதிகம் பேசி பழக்கப்படாத அவர் தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது. அந்த இன்னலையும் தாங்கித்தான் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் பாங்கினை அவரே வியந்துதான் மேற்கொண்ட வசனத்தைப் பேசியுள்ளார். அப்படி உயிரையும் கொடுத்து ஏன் அவர் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதையும் ஏற்கனவே விளக்கிவிட்டார். அது என்னவென்றால் தி,மு.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும். தி.மு.க கட்சியை அழித்திட வேண்டும். அதற்குத்தான் இந்த வீர வசனம்.

கடந்த நான்காண்டுகளில் தமிழகம் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்தது. அதில் எதிலாவது இந்த வீரம் வெளிப்பட்டதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற எவ்வளவோ முயன்றது தமிழகம். மாணவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தார்கள். தேர்வைத் தவிர்க்க முடியவில்லை. அனிதா என்ற ஏழைச் சிறுமி பள்ளி இறுதியாண்டில் சிறந்த மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வுக்குப் பயிற்சி செய்ய வசதியில்லாததால் மருத்துவப் படிப்பு என்ற கனவு முறிந்துபோக தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். தமிழகமே கொந்தளித்தது. திரைப்படக் கலைஞர்கள் வெகுண்டார்கள். எழுத்தாளர்கள் பதறினார்கள். மாணவர்கள் மருண்டார்கள். அப்போது பழனிசாமி என் உயிரைக் கொடுத்தேனும் நீட் தேர்வை எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தால் தமிழர் மனங்களிலும், வரலாற்றிலும் இடம் பிடித்திருப்பார். ஆனால், அவர் அரசு செலவில் நான் கோச்சிங் சென்ட்டர் ஆரம்பிக்கிறேன் என்றார். நீட்டுக்கு எதிரான சட்டமன்றத்தின் தீர்மானத்தை நடுவண் அரசு குப்பையில் போட்டபோது வலிக்கவேயில்லையே என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு போல சிரித்தார்.

தூத்துக்குடியில் மக்கள் அறவழியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பல காலம் போராடினார்கள். போராட்டத்துக்கு முதலிலேயே செவி சாய்த்து ஆலையை மூடியிருந்தால் எந்த உயிரும் போயிருக்காது. காப்பர் ஸ்மெல்டிங்க் ஆலைகளை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத் தீர்மானம் இயற்றியிருந்தால் வரலாறு கொண்டாடியிருக்கும். ஆனால், போராட்டம் முற்றுவதற்கு அனுமதித்தார் பழனிசாமி. ஊரே கதைவடைப்புல்கு நாள் குறித்தது. மக்கள் கொதிப்படைந்தார்கள். பழனிசாமியின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்பது பெரும் மர்மம்தான். போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதாகப் பின்னால் ஒரு கதை சொன்னார்கள். அப்படி ஊடுருவும் வரை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா? அந்த பொல்லாத நாளும் வந்தது. மாவட்ட ஆட்சியர் மாயமானார். மக்கள் ஊர்வலத்திலே குழப்பம் நேர்ந்தது. யாரோ வட்டாட்சியர் அவர் அதிகார வரம்பை மீறி துப்பாக்கியால் சுட அனுமதித்தார். எங்கிருந்தோ முளைத்தனர் மத்திய காவல் படையினர்; வேனில் ஏறி ஸ்னைபர் துப்பாக்கிகளால் தொலைதூரத்திலிருந்து போராடும் மக்களை நோக்கி குறி பார்த்துச் சுட்டனர். அது ஒரு காட்சியென்றால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்னோலினை வாயில் சுட்டது ஒரு பயங்கர காட்சி. அவரையும் சேர்த்து மொத்தம் பதிமூன்று உயிர்கள் பலியாகின.

பொங்கியெழுந்தாரா பழனிசாமி? என் உயிரைக் கொடுத்தேனும் ஸ்டெர்லைட் பிரச்சினையைத் தீர்ப்பேன் என்றுரைத்தாரா? இல்லையில்லை. “தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன்” என்று கொடுங்கோலனும் சொல்ல அஞ்சும் அசட்டு அகம்பாவ வார்த்தைகளைச் சொன்னார். உலகமே தூத்துக்குடி சம்பவத்தால் அதிர்ந்தது. உலகில் எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. அரசுடன் மக்கள் மோதியதால் எண்ணற்றோர் இன்னுயிரை ஈந்துள்ளனர். ஆனால் உலக வரலாற்றில் முதல் முறையாகச் சூழலை மாசு படுத்தும் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை அவர்கள் அரசே கொன்று குவித்தது இதுதான் முதல் முறை. அந்த அரசின் முதலமைச்சராக இருந்த பழனிசாமி தொலைக்காட்சி பார்வையாளராகப் பங்கேற்ற அற்புதம் ஈடு இணையற்றது. அதற்குப் பிறகு ஆலைக்குப் பூட்டுப் போட்டார்கள். ஆனாலும் ஆலையைத் திறக்க விடாமல் செய்வதற்கான தீர்மானங்களை சட்டமன்றத்தில் இயற்றவில்லை. வழக்கு நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. மக்கள் மறப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். பழனிசாமி நடந்த நிகழ்ச்சி எதற்கும் பொறுப்பேற்கவில்லை.

ஸ்டெர்லைட் பிரச்சினையாவது காவிய சோகம். வெளியில் சொல்லவே அவமானப்படும் பண்பாட்டு சீரழிவும் பொள்ளாச்சியில் நடந்தது. இளம் பெண்களை, மாணவிகளை வீடியோ படம் எடுத்து, அதை வைத்து பிளாக்மெயில் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த கும்பல் ஒன்று ஊரில் செயல்பட்டு வந்தது ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் துணிச்சலால் வெளிச்சத்துக்கு வந்தது. பழனிசாமியின் பொறுப்பில் இருந்த காவல்துறை பொறுப்பைத் தட்டிக்கழிக்கப்பார்த்தது. ஊடகங்கள் தலையிட்டதால் வழக்கு பதிவானது. விவரங்கள் வெளியாகின. அப்போதுதான் தெரிந்தது இளம்பெண்களின் வாழ்வை சிதைத்த கும்பலில் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களும் உண்டு என்பது. என்ன செய்தார் பழனிசாமி? கட்சியின் உள்ளூர் அமைப்புகளைக் கலைத்தாரா? ஐயத்தின் வளையத்திற்குள் சட்ட மன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் வந்தபோது அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கினாரா? உங்கள் மீது குற்றமில்லை என்று நிரூபித்துவிட்டு மீண்டும் பதவியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாரா? குற்றவாளிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் உள்ள தொடர்புகளெல்லாம் புகைப்படங்களாக வெளியான பின்பும் பொங்கி எழவில்லையே பழனிசாமி? வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றிவிட்டேன் என்றதுடன் அவர் பொறுப்பு முடிந்தது. என் உயிரைக் கொடுத்தேனும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுப்பேன், தமிழ்ப் பண்பாட்டுக்கு நேர்ந்த அவப்பெயரைத் துடைப்பேன் என்றாரா? ஒரு முதலமைச்சராக தனக்கு ஒரு பொறுப்பு உண்டு என்பதை உணர்ந்தவர் போல என்றாவது பேசியிருக்கிறாரா? சி.பி.ஐ-க்கு மாற்றுவதுடன் முடிந்ததா அவர் பொறுப்பு? நாடே அந்த இளம்பெண்களில் ஒருவர் ‘அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் அண்ணா, ஆடையைக் களைகிறேன்’ என்று ஓலமிட்டதைக் கேட்டு பதறியதே?

அறுபத்தைந்தாம் ஆண்டு மொழிப்போரிலே ராணுவத்தைச் சந்தித்த நகரம் பொள்ளாச்சி. பழனிசாமியின் போலீஸ் தூத்துக்குடியில் நிகழ்த்திய வெறியாட்டத்தை அன்று இந்திய ராணுவம் பொள்ளாச்சியில் நிகழ்த்தியது. ஒருவாரம் ஊரடங்குச் சட்டம். இறந்தவர் எத்தனை பேர் என்று இன்றுவரை தெளிவில்லை. அப்படிப்பட்ட வீரம் செறிந்த ஊரை, பண்பாட்டுச் சீரழிவின் அடையாளமாக்கிவிட்டு, தேசமே பொள்ளாச்சி என்ற பெயரைக்கேட்டால் வெட்கும்படி ஆனபிறகு எதுவுமே நடக்காதது போல அதே பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தருபவர்தான் இந்த உயிர்கொடுக்கும் வீரர் பழனிசாமி.

தமிழர் நலன்களுக்கு எதிராக எத்துணை பிரச்சினைகளை செய்தது பாஜக அரசு? சரி, வேறு வழியில்லை என்று நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் எத்தனை சோதனைகள்? தேர்வெழுத எத்தனை மாநிலங்களுக்குத் துரத்தப்பட்டனர் தமிழக மாணவர்கள்? அனிதாவைத் தொடர்ந்து எத்தனை நீட் உயிர்த்தியாகங்கள்? தமிழக நிறுவனங்களில், அமைப்புகளில் தமிழ் தெரியாத வடவர்களைப் பணியில் அமர்த்தி இந்தி தெரியாவிட்டால் தமிழகத்திலேயே வாழ முடியாது என்று தோன்றும்படி பாஜக அரசு சதிவலை புனைவதை அறியாதவரா பழனிசாமி? என்றாவது ஒருநாள் தவறியேனும் தமிழர் நலன் காக்க என் உயிரையும் தருவேன் என்று சூளுரைத்தாரா பழனிசாமி?

பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள கட்சியின் பெயரில் அண்ணா என்ற, திராவிடம் என்ற இரு வார்த்தைகள் உண்டு. அவற்றின் பொருள் அவருக்கும் தெரிந்திருக்கும். அந்த இரண்டு சொல்லுக்குமே வரலாற்றில் பொருள் தந்தவர் ஈரோட்டுப் பகலவன் பெரியார். பழனிசாமி என்றாவது பெரியார் சிலைக்கு மாலை அணிவித்திருப்பாரா என்று ஊடகங்கள்தான் கூற வேண்டும். அதை செய்தால் எங்கே பாரதீய ஜனதா அரசு தன்னை ஆட்சியிலிருந்து அகற்றிவிடுமோ என்று அஞ்சியிருப்பார். அல்லது உள்ளத்திலே பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம் படர்ந்திருக்காது. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, பிளவுண்ட கட்சியிலேயே ஜெயலலிதா அம்மையார் அணியில் அரசியலில் புகுந்தவருக்கு திராவிட அரசியல் வரலாறு என்ன தெரியுமென்பதை ஊகிப்பது கடினம். கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என்பவரிடம் எதை எதிர்பார்ப்பது என்று முடிவு செய்வதும் கடினம். அது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால், அவர் ஆட்சியிலே தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டன. இழிவுப்படுத்தப்பட்டன. அவரது கூட்டணி கட்சியினரான பாரதீய ஜனதா கட்சியினர் பெரியாரை இழிவுப்படுத்திப் பேசினார்கள். அதற்கெல்லாம் கொதித்தெழுந்தாரா பழனிசாமி? பெரியாரை இழிவு செய்தால் என் உயிரைக் கொடுத்தேனும் தடுப்பேன் என்று சொல்லியிருப்பாரா?

அவரைச் சொல்லி பயனில்லை. அந்தக் கட்சியின் ஒரே கொள்கை, மூச்சு, பேச்சு எல்லாம் தி.மு.க எதிர்ப்புதான். ஏன் எதிர்க்கிறோம், எதற்கு எதிர்க்கிறோம் என்று தெரியாத கண்மூடித்தனமான எதிர்ப்பு. அ.இ.அ.தி.மு.க பேச்சாளர்களிடம் காஷ்மீர் பிரச்சினை பற்றிப் பேசுங்கள் என்றால், எம்.ஜி.ஆர் படப்பாடலை பாடுவார்கள். அதற்கு மேல் எதுவும் தெரியாது. இந்தியக் குடிமக்களையே மதத்தின் பேரால் பாகுபடுத்தும் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் வந்துவிட்டதே என்று தேசத்தை நேசிப்போர் பதறுவார்கள். அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் அந்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போடுவார்கள். அந்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் எங்கே பாதிக்கப்பட்டார்கள் என்று குழந்தைபோல கேட்பார் பழனிசாமி. புதிய கல்விக்கொள்கையில் எண்ணற்ற பிரச்சினையிருக்கிறதே என்று கேளுங்கள். மும்மொழிக்கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை என்று முணுமுணுப்புடன் நிறுத்திக்கொள்வார்கள். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை பற்றிக் கேட்க வேண்டாம். அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று நமக்கே தெரியும். அந்த கட்சியினரின் நாடி, நரம்பு, ரத்தம், சதையெல்லாம் ஒரே ஒரு உணர்ச்சிதான் உண்டு. அவர்களுக்குத் தெரிந்த அரசியலெல்லாம் அதுதான். அது தி.மு.க எதிர்ப்பு. அண்ணனை எதிர்க்க அந்நியனை கூட்டி வந்த சுக்ரீவ வம்சத்தினர் இவர்கள்.

அதனால்தான் ஒரு பேச்சுக்குக் கூட, தமிழுக்காகவோ, தமிழர் நலனுக்காகவோ உயிரைக் கொடுப்பேன் என்று சொல்ல இயலாத பழனிசாமி, தான் மீண்டும் ஆட்சிக்கு வர, தி.மு.க வெற்றியைத் தடுக்க உயிரைக் கொடுப்பேன் என்று வீர முழக்கம் செய்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தான் செய்த ஊழல்கள் வெளியில் வரும் என்ற அச்சமும் இருக்கத்தானே செய்யும். அதுதான் வீரம் பொங்குகிறதோ என்னவோ.

தமிழகம் பார்த்த முதல்வர்களிலேயே தலைமைப் பண்பற்ற ஒருவர் உண்டென்றால் அது பழனிசாமிதான் என்பதை இந்த நான்காண்டு நிகழ்வுகளைச் சீர்தூக்கிப்பார்ப்பவர்கள் உணர்வார்கள். தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அவரிடும் உயிர் கொடுக்கும் முழக்கம் அதற்குச் சான்று பகிர்கிறது.

**கட்டுரையாளர் குறிப்பு:**

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share