Zரஜினி-நிருபர்கள்: ஏன் இந்த அவசரம்?

Published On:

| By Balaji

ரஜினி ஒவ்வொரு வாரமும் ஒரு பிரேக்கிங் நியூஸைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். சிஏஏ குறித்து கருத்து கூறியது, இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்தது, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த பின்னர் மன வருத்தத்தில் இருப்பதாகக் கூறியது என ரஜினி பிரேக்கிங் நியூஸ்கள் கூடிக்கொண்டே போகின்றன. இந்நிலையில், நாளை(12.03.2020) காலை 10 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் ரஜினி சந்திக்கிறார். இத்தனை நாட்களும் பத்திரிகையாளர்களை விமான நிலையம், வீட்டு வாசல் என ரஜினி சந்தித்துக்கொண்டே தான் இருந்தார். இப்போது என்ன புதிய பத்திரிகையாளர் சந்திப்பு? அப்படி என்ன பேசப்போகிறார்? என்ற கேள்வி இந்நேரம் பல ஊடகங்களில் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். இதே கேள்விகளுடன் நாளைய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் வேலைகளில் மும்முரமாக இருக்கும் சிலரை அணுகி விசாரித்தபோது, இது நீண்ட நாள் கடன் என்கின்றனர்.

அரசியல் தலைவர்களில் பலர் பத்திரிகையாளர்களை இப்படி சந்திப்பது உண்டு. பொது இடங்களில், அரசியல்வாதிகள் காரிலிருந்து இறங்குவதற்குள் அப்படியே பிடித்து கேள்விகளை அடுக்கும்போது பல பத்திரிகையாளர்களின் கேள்விகள் அங்கு ஏற்படும் கூச்சல் குழப்பத்தில் பதிலளிக்கப்படாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது. ரஜினியைப் பொறுத்தவரை எப்போதும் சரசரவென பேசிவிட்டு விரைவாக நடந்துபோய்விடுவார். எனவே, பத்திரிகையாளர்களிடத்தில் ரஜினி பாரபட்சம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு பத்திரிகையாளர்கள் இடையே நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. இதனை வெளிப்படையாக ரஜினி தரப்பிடமும் பல பத்திரிகையாளர்கள் கூறியிருக்கின்றனர். அப்படிச் சென்ற தகவல்களினால், என்ன வேண்டும் என ரஜினி கேட்டபோது எவ்வித அவசரகதியிலும் பதில் சொல்லாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ரஜினியின் நிலைப்பாட்டை விளக்கும் ஒரு கச்சிதமான, இலகுவான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அப்படி நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடக்கும் கோரிக்கையை நிறைவேற்றவே இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரஜினி அழைத்திருக்கிறார் என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். முக்கிய அறிவிப்பு வெளியாகக்கூடிய அளவுக்கு எவ்விதமான ஏற்பாடுகளும் இதுவரை தொடங்கப்படவில்லை என்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் தரப்பில் ரஜினியின் கொள்கை, தொலைநோக்குப் பார்வை, சிஸ்டத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் மற்றும் ரஜினியை மன வருத்தத்துக்கு உட்படுத்திய அந்த ஒரு விஷயம் என ஒவ்வொரு வகையான கேள்விகளைப் பிரித்துக்கொண்டு தயாராகின்றனர்.

**-புகழ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share