பாஜகவில் இணைந்தது தொடர்பாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 25) பாஜகவில் இணைந்தார் . அவருக்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை வரவேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், “சமீப காலமாக மாற்றுக் கட்சிகளில் இருந்து பிரமுகர்களும், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகள் ஒரே கட்சியில் இருந்தவர்கள் கூட வருகிறார்கள். அவர்களெல்லாம் பிரதமர் மோடியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று கூறுகிறார்கள்.
அந்த வரிசையில் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் இணைந்துள்ளார். இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அண்ணாமலை பாஜகவில் இணைந்ததை வரவேற்கிறேன். அவருடைய பணி தமிழக பாஜகவிற்கு மேலும் உத்வேகத்தைக் கொடுக்கும்” என்று கூறினார்.
இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை பாஜகவில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்தார். அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், “இது தலைமை மற்றும் ஆளுமைத் திறனைப் பற்றிக் கூறுகிறது. அச்சமின்மை, தைரியம், ஊக்கம், அறிவு ஆகியவற்றை பொருள் கொள்கிறது. இந்த நான்கையும் பிரதமர் நரேந்திர மோடியிடமும், பாஜக தலைவர்களிடமும் நான் காண்கிறேன். இதன் காரணமாக பாஜகவில் இணைந்து கட்சியை வலுப்படுத்த முடிவு செய்தேன். பாஜகவை வலுப்படுத்த என்னால் ஆன உதவிகளை செய்வேன்” என்று தெரிவித்தார்.
An eminent personality joins BJP in presence of Shri @PMuralidharRao and Shri @Murugan_TNBJP at BJP headquarters. https://t.co/ah7ASz41yg
— BJP (@BJP4India) August 25, 2020
பாஜகவின் சாதாரண விசுவாசமிக்க தொண்டன் நான் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, “எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல்தான் பாஜகவிற்கு வந்தேன். கட்சி என்ன முடிவு செய்கிறதோ அதனை ஏற்பேன்” என்றும் கூறினார்.
**எழில்**�,”