இந்தப் பக்கமா அந்தப் பக்கமா.. ரங்கசாமி எந்தப் பக்கம்?

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளின் கூட்டணி தொகுதிப்பங்கீடு இழுபறியாக இருப்பது ஒருவிதம் என்றால், புதுச்சேரியின் கூட்டணி இழுபறி வேறுவிதம்!

முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணி என்பது போய், பாஜக தலைமையிலான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி என மாறியதும் அங்கு சலசலப்பு உண்டானது. பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமே எனும் இடத்துக்கு தள்ளப்பட்டார், ரங்கசாமி.

மற்ற மாநிலங்களில் எதையும் இடதுகையால் அசாதாரணமாகக் கையாளும் பாஜகவின் பாணி, புதுச்சேரியில் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. தன்னை முதலமைச்சராக முன்னிறுத்தாத கூட்டணியில் இடம்பெறமுடியாது என தெளிவாகச் சொல்லிவிட்டு, கோயில் கோயிலாகச் சென்று ஆலோசனை செய்துவருகிறார், ரங்கசாமி.

தனித்துப் போட்டியிடும் முடிவு குறித்து தன் ஆதரவாளர்கள், நெருக்கமான தொழிலதிபர்களுடன் அவர் தீவிரமாக ஆலோசித்துவருகிறார். இதில் எதிர்பாராத திருப்பமாக, திமுக தரப்பிலிருந்து அவருக்கு கூட்டுசேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி திமுக மாநிலச் செயலாளர் நாஜிம், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ரங்கசாமி தலைமையேற்கவேண்டும் என வெளிப்படையாகவே வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கூறியிருப்பது, முக்கியமானது. மேலும், காங்கிரஸ் தரப்பிலும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியிடம் இது பற்றி பேசியிருக்கிறார்கள். அவரும் ரங்கசாமியின் தலைமையில் கூட்டணிக்கு ஒப்புகொண்டதாக நாஜிம் கூறியுள்ளார்.

இந்த நடப்புகளை உன்னிப்பாக கவனித்துவந்த பாஜக தரப்போ, இப்போது இறங்கிவந்து, ரங்கசாமியே முதலமைச்சர் வேட்பாளராக இருக்கட்டும் என இறங்கிவந்திருக்கிறது. ஏற்கெனவே பேசியபடி பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என பாசம் காட்டுகிறார்கள் என்கிறார்கள் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள்.

இப்போதைக்கு ஆட்டத்தின் பந்து ரங்கசாமியின் பக்கம் இருக்கிறது. அவர் நம்பும் கோயிலில் எடுக்கும் முடிவுதான் கூட்டணியைத் தீர்மானிக்கும் என்கிறார்கள்.

வேறு வழியென்ன, பாஜகவும் காத்திருக்கவேண்டியதுதான்!

**- வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share