பிற்போக்குவாதிகளிடம் இருந்து பெண்கள் எப்போது விடுபடுவார்கள்? – பகுதி 4:

Published On:

| By Balaji

பாஸ்கர் செல்வராஜ்

ஆப்கனில் இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாதிகளும், இந்தியாவில் பார்ப்பனிய சாதி வெறியர்களும் பெண்களின் மீது செலுத்தும் அடக்குமுறைக்கும் வன்முறைக்குமான அடித்தளம், தமது இனக்குழு அடையாளத்தைத் தொடரும் இவர்களின் வேட்கை என முடிவுக்கு வந்தால், இந்த இனக்குழு – சாதிய சிந்தனை எப்போது மறையும்; இவர்களின் பெண்களின் மீதான ஆதிக்க அடக்குமுறை எப்போது ஒழியும்? இந்தக் கேள்விக்கு, தமிழகம் கடந்து வந்து கொண்டிருக்கும் பாதையில் இருந்து விடை காண முயலலாம். இப்போது தாலிபான்களிடம் வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருக்கும் பெண்களின் மீதான ஆணாதிக்க அடக்குமுறை மிருகம் தொண்ணூறுகளுக்குப் பிறகு நமது ஊரில் தட்டி அடக்கப்பட்டு முடக்கி வைக்கப்பட்டு வருகிறது. அப்போது இருந்த சாதிய இறுக்கமும் ஓரளவு இளக்கம் கண்டு வருகிறது. நம்மிடம் இந்த மாற்றத்தை நிகழ்த்தியது எது?

**எப்படி மாறுகிறது தமிழகம்?**

எண்பதுகளில் ஐந்து கோடி மக்கள், 54 விழுக்காடு கல்வியறிவுடன் 100 கோடி பெறுமான (ஜிடிபி) பொருட்களை உற்பத்தி செய்த தமிழகம் இன்று எட்டு கோடி மக்களுடன், 80 விழுக்காடு கல்வியறிவுடன் 30,000 கோடி பெறுமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த மக்கள்தொகைக்கு ஏற்ற பொருளாதார வளர்ச்சி (Per Capita Income) என்ற தர்க்கத்தின்படி பார்த்தால் நம்மைவிட இந்த வளர்ச்சிக் குறியீட்டில் மேலே இருக்கும் ஹரியானாவில் சாதி இளக்கம் கண்டிருக்க வேண்டும். ஆனால், அங்கு அது உக்கிரமாக இருக்கிறது. எனவே வெறும் எண்களை மட்டும் கொண்டு இதைப் பார்க்காமல் எந்தவிதமான வளர்ச்சி என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஹரியானாவின் உற்பத்தி விவசாயம் சார்ந்தது. இந்த உற்பத்தியில் தனிமனிதரின் பங்களிப்போடு இயற்கையின் பங்களிப்பான விவசாய நிலத்தின் பங்கு சரிபாதியாக இருக்கிறது.

தமிழ்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் தொழிற்துறை பெரும் பங்காற்றுகிறது. இதில் இயற்கையாகக் கிடைக்கும் மூலப்பொருட்களின் நேரடி பங்களிப்பு குறைவானது. தனிநபர் உழைப்பின் பாத்திரம் மிகுதியானது. ஆனால், இதன்படி பார்த்தால் நம்மைப் போலவே தொழிற்துறை வளர்ச்சி கண்டிருக்கும் குஜராத்திலும் சாதியின் கடுமை குறைந்திருக்க வேண்டுமே! அப்படி அங்கு குறைந்திருப்பதாக எவரும் சொல்ல மாட்டார்கள். இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள அங்கே தொழிற்துறையில் எவ்வளவு விழுக்காடு மக்கள் பங்கேற்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அங்கு இன்றும் 52 விழுக்காடு தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது மட்டுமல்ல இந்தியாவிலேயே மத்தியப்பிரதேசத்துக்கு (201) அடுத்து, மிகக் குறைவான (216) கூலி பெறும் தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் 30 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பது மட்டுமல்ல, கேரளாவுக்கு (671) அடுத்து, அதிக கூலி பெறும் (411) தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் இருந்து தமிழகத் தொழிலாளர்களின் உழைப்பின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.

**மாற்றத்துக்கான காரணி!**

ஆக, இயற்கையின் பங்களிப்பைக் குறைத்து தனிநபர்களின் உழைப்புத் திறனைக் கோரும் தொழிற்துறை வளர்ச்சியும், இதில் எவ்வளவு மக்கள் பங்கேற்கிறார்கள், அதன்மூலம் சராசரியாக தொழிலாளர்களின் திறன் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதுதான் சமூக மாற்றத்தைத் தீர்மானிக்கும் காரணி. இந்த உழைப்பின் வளர்ச்சியினால் தனிமனிதர்களின் வருவாய் உயரும்போது அது அனைவரும் நிலத்தில் குழுவாக உழைத்து அதன் பலனை பங்கிட்டுக் கொள்வது என்று இருக்கும் கூட்டுக்குடும்ப முறையையும், குழுவாத சிந்தனையும் மாற்றி என் உழைப்பு, என் பணம், என் குடும்பம் என்ற தனியுடைமை சிந்தனையை விதைக்கும். இந்த தனிமனித உழைப்பில் ஏற்படும் மாற்றம், உடனடியாக குடும்பத்தில் எதிரொலிக்கும். அது கூட்டுக் குடும்ப முறையை உடைத்து சமூகத்தில் தனிக்குடும்பங்களின் உருவாக்கத்தைப் பெருக்கும். எண்பதுகளில் எங்கும் நிறைந்திருந்த கூட்டுக் குடும்பங்கள், அது உடைந்து நொறுங்கியதன் வெளிப்பாடான ‘சம்சாரம் அது மின்சாரம்’ போன்ற படங்கள் வந்தது எல்லாம் இன்று காலம் கடந்தவை.

இந்தத் தொழிற்துறை உற்பத்தியில் பெண்களின் பங்கும் அதிகரிக்கும்போது இனக்குழு-சாதியவாத சிந்தனை கொண்ட ஆண்கள், பெண்கள் மீது கொண்டிருக்கும் இறுக்கத்தைக் குறைக்கும். இந்தப் பின்னணியில் தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களையும், தொழிற்துறை பெருக்கத்துக்கு அது எடுத்துக்கொள்ளும் முனைப்பையும், உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க அது எடுக்கும் முயற்சிகளையும் தற்போதைய ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற பரவலாக்கும் கொள்கையும் பார்த்தால் அதன் முக்கியத்துவத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்துகொள்ளலாம். இந்த தர்க்கம் சரியா என சவுதி அரேபியா, இரான், துருக்கி ஆகிய இஸ்லாமிய நாடுகளுக்கும் பொருத்திப் பார்ப்போம். இயற்கையாக நிலத்திலிருந்து கிடைக்கும் எண்ணெயை பெருமளவு உற்பத்தி செய்யும் சவுதியில் பெண்களின் மீதான அடக்குமுறை குறித்து சொல்லத் தேவையில்லை.

**மாறுபடும் இஸ்லாமியப் பெண்களின் நிலை**

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையின் காரணமாக சொந்தக் காலில் நிற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான இரானில் எண்ணெய் உற்பத்தியோடு முதலாளித்துவ உற்பத்தியும் குறிப்பிட்ட அளவு வளர்ந்திருக்கிறது. சிறிய நாடான இரான் 2008 வரை புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும் காப்புரிமையை இந்தியா அளவுக்குப் பெற்று வந்திருக்கிறது. பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்ப உற்பத்தியில் இந்தியாவைவிட ஓரளவு சுயசார்பை அடைந்திருக்கிறது. அங்கு உற்பத்தியில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது. இது அந்தப் பெண்களுக்கு போராடும் பொருளாதார வலுவைக் கொடுத்து சவுதியைவிட மேம்பட்ட உரிமைகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அங்கே உடலை முழுவதுமாக மூடிக்கொண்டு ஆண்கள் துணையுடன் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. தலையைத் துணிகொண்டு மறைத்தாலே போதுமானது. எண்ணெய் வளமற்ற துருக்கி இரானைவிட முதலாளித்துவ உற்பத்தியில் வளர்ந்திருப்பதும் அங்கு இரானியப் பெண்களைவிட மேம்பட்ட சுதந்திரத்துடன் புர்கா இன்றி, தலையை மறைக்காமலும் பெண்கள் வெளியில் செல்வதையும் காணலாம். இவை எதுவும் அற்ற ஆப்கனில் பெண்களின் அவலநிலையையும் சேர்த்துப் பார்க்கும்போது இந்த அளவுகோல் சரியாகப் பொருந்திப் போகிறது.

**மாற்றத்தை அளவிடும் அளவுகோல்!**

ஆக, ஒரு மக்கள் இனத்தின் வளர்ச்சியை அளவிடும் முக்கிய அளவுகோல் (வெறும் ஜிடிபி எண்கள் அல்ல) சராசரி தனிநபர் உழைப்பின் வளர்ச்சியும் குடும்பத்தின் (Development of Labor and Family) வளர்ச்சியாகவுமே இருக்க முடியும். இது எந்த அளவுக்கு வளர்கிறதோ, அந்த அளவுக்கு சமூக செல்வத்தின் அளவு உயரும். இல்லையெனில், இருக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளாளுக்கு அடித்துக்கொண்டும், அதனை எப்படியாவது அடைவது என ஆளாய்ப் பறப்பதும், அது தனக்கும், தனது குடும்பத்துக்கும், குழுவுக்குமானதாக இருக்க வேண்டுமென சிறிய சாதிய-இனக்குழுவாத வட்டத்துக்குள் சுருங்கி விடுவதும், அதற்காக பெண்களுக்கு கற்பு நெறி கற்பிப்பதும், திருமணம் செய்வதில் கட்டுப்பாடு விதிப்பதுமாக சமூகம் இருக்கிறது. இதிலிருந்து விடுவித்துக் கொண்டு செல்வத்தைப் பெருக்குவது இந்தக் கட்டமைப்பில் உடைப்பை ஏற்படுத்தாமல் சாத்தியம் இல்லை. அதேசமயம் இப்படி இருக்கும் கட்டமைப்பில் மாற்றம் நிகழும்போது இதில் பலனடைந்து கொண்டிருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும் இருக்க முடியாது.

**மாற்றியது எது?**

எனவே, இது ஒன்றுக்கொன்று முரணானது. ஒரு போராட்டம் இன்றி இந்த முரணை உடைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியாது. அப்படிப் போராடாமல் கிடைப்பது உண்மையான முன்னேற்றமாகவும் இருக்க முடியாது. இந்தப் பின்னணியில் குலக்கல்வியாளர்கள் ஏன் கல்வித்தடையில் குறியாக இருந்தார்கள், திராவிட இயக்கம் ஏன் அவ்வளவு உக்கிரமாக அதற்கு எதிர்வினை ஆற்றியது என்பதை எண்ணும்போது அவர்களின் உழைப்பும், அதில் கொண்டிருந்த உறுதியும், அந்தக் கல்வியின் அவசியம் அறிந்த அவர்களின் புரிதலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தப் போராட்டம் எப்படி இந்த சாதிய கட்டமைப்பை உடைப்பதில் இன்றியமையாதது என்பதையும் உணர்த்தி நிற்கிறது. இப்படி போராடி அறுபதுகள் முதல் சாதி கடந்து கல்வி பரவலாக்கப்பட்ட தமிழகத்தில் திறன்மிக்க தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். இவர்கள் தமிழகத்தின் தொழிற்துறை வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்கள்.

இந்தத் தொழிற்துறை வளர்ச்சி பொருளாதாரப் பெருக்கத்துக்கு வித்திட்டது. அப்படி உருவாக்கப்பட்ட சமூக செல்வம் சமூகநலத் திட்டங்கள் மூலம் அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது. அது மேலும் படித்த தொழிலாளர்களையும் அவர்களின் திறன்வளர்ச்சிக்கும் அடித்தளமாகி வருகிறது. இந்தச் செல்வப் பெருக்கம் மென்மேலும் பெருகி எல்லோருக்கும் பரவலாக்கப்படும்போது இப்போது விரிசல்களைச் சந்தித்து வரும் பழைய இனக்குழுவாத – சாதிய கட்டமைப்பு படிப்படியாக உடைந்து இறுதியில் இல்லாமல் போகும். அப்போது நமது சமூகம் மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்று இருக்கப்பட்டவன், இல்லாதவன் என்ற இரு பிரிவுகளை மட்டுமே கொண்டதாக இருக்கும். நமது குடும்பம் என்பது ஆண் – பெண் இருவர் தொடர்புடைய காதல் திருமணமாக இருக்கும். தற்போது இருக்கும் பெற்றோர் இடையீட்டில் நடக்கும் இணைமணமும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற என்ற ஒருதார மணமுறையும் கலந்த கலவையாக இருக்காது. இப்போதே காதல் மணத்துக்கான விதைகள் ஊன்றப்பட்டு வெடித்து வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. அதை நாம் தகுந்த பொருளாதார உரமிட்டு வேகமாக வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.

**மாற்றத்துக்கு வேண்டியது என்ன?**

எனவே சராசரி தொழிலாளர்களின் திறன் வளர்ச்சி (Average Labor Development) என்பதே சமூக வளர்ச்சியின் அடித்தளம். இப்போது நமது தொழிலாளர்கள் நவீன இயந்திரங்களை இயக்கும் அளவுக்குத்தான் திறனைக் கொண்டிருக்கிறார்களே ஒழிய அதை உருவாக்கும் அளவு வளர்ச்சியடையவில்லை. இதன் பொருள், இல்லவே இல்லை என்பது அல்ல. இவ்வாறான நபர்களின் அளவு குறைவாக இருக்கிறது. நாம் எவ்வளவு தூரம் கல்வியைப் பரவலாக்கி, அதன் தரத்தை மேம்படுத்தி, அந்தத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துகிறோமோ அந்த அளவுக்கே நம்மால் திறன்மிகு தொழிலாளர்களையும் அவர்களால் வலுவான தொழிற்துறை வளர்ச்சியையும் கட்டமைத்து, செல்வத்தைப் பெருக்கி, எல்லோருக்கும் பரவலாக்கி நாம் சாதிய இனக்குழுவாதம் கடந்த வர்க்க சமூகமாக மாற முடியும். தொண்ணூறுகள் வரை முதல் மூவர்ணத்தைத் தவிர மற்றவர்கள் யாரும் தொழிற்துறை உற்பத்திக்குள் நுழைந்து போட்டிக்கு வந்துவிடாமல் தடுக்க லைசன்ஸ் ராஜ்ஜியம் நடத்தி வந்தார்கள்.

இந்தத் தொழித்துறை தடையினால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடு வெறுப்பில் தனது கண்டுபிடிப்புகளை உடைத்து நொறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பிறகு வந்த உலகமயவாதிகளுடனான பார்ப்பனியவாதிகளின் மோதலில் அந்தத் தடை உடைத்தெறியப்பட்டு தமிழகம் தொழிற்துறையில் கால்பதித்து வேகமாக வளரும் வாய்ப்பைப் பெற்றது. மற்ற மாநிலங்கள் எல்லாம் அப்போது கல்வியைப் பரவலாக்கும் வாய்ப்பைப் பெற்ற அதேவேளை அதற்கான போராட்டத்தின் மூலம் ஏற்கனவே திறன்வாய்ந்த தொழிலாளர்களின் கட்டமைப்பைப் பெற்றிருந்த தமிழகம் தொழிற்துறையில் முந்திக்கொண்டு முன்னேறியது. இப்போது மீண்டும் ஜிஎஸ்டி என்றும் நீட் என்றும் நமது இந்தப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு குறுக்கே நிற்கிறார்கள். எதிர்கால பொருளாதாரத்தின் அடிப்படையான இணையம், சூரிய ஒளி மின்சாரம், சரக்கு போக்குவரத்து (Roads, Airport and Port), இணைய வர்த்தகத் தொழில்நுட்பம் ஆகியவற்றை பார்ப்பனியவாதிகளுக்கு மட்டுமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி ஒற்றுமையாக உடைத்து முன்னேறுவது என்பதுதான் நமது இன்றைய அரசியலாக இருக்க வேண்டும். கெடுவாய்ப்பாக தமிழரா, திராவிடரா என்று நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதில் திராவிடத்தை எதிர்த்து சண்டையிடுபவர்களும், ஆதரித்து சண்டையிடுபவர்களும் தமிழ் தேசியவாதிகளாகவே இருக்கிறார்கள். ஏன் ஒரே கருத்தியலைக் கொண்டதாக சொல்லும் இருவரும் ஒரே விஷயத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சண்டையிடுகிறார்கள்? இந்த இருவரும் முன்வைக்கும் தமிழ் தேசியத்துக்கு ஏதேனும் சமூக பொருளாதார அடித்தளம் இருக்கிறதா?

**[பகுதி 1 ](https://minnambalam.com/politics/2021/10/13/6/marring-in-close-blood-relations-in-TamilNadu)** / **[பகுதி 2 ](https://minnambalam.com/politics/2021/10/14/9/unchanged-muslim-practices-and-aryans-race)** / **[பகுதி 3 ](https://minnambalam.com/politics/2021/10/15/8/India-and-Afganisthan-social-similarities)**

**நாளை காலை 7 மணி பதிப்பில் பார்ப்போம்.**

**பாஸ்கர் செல்வராஜ்**

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு **[naturebas84@gmail.com](mailto:naturebas84@gmail.com)**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share