பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து பேசிய கருத்து பூதாகரமாக வெடித்துள்ளது.
தஞ்சை மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு நேற்று(ஜனவரி 25) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக போராட்டம் நடத்தியது.
அதில் பேசிய பாஜக எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன்,” சட்டமன்றத்தில் தைரியமாக ஒரு ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்கட்சியாக இல்லையென்றாலும் பாஜகவின் அண்ணாமலை துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
“அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு, தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்களேன்” என்று மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன்,
“நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் பதவி விலகி, அதிமுக தயவில்லாது வென்று சட்டமன்றத்தில் நுழைந்து ஆண்மையை நிரூபிக்கலாமே?” என்று அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் உள்பட அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கண்டன அம்புகளை வீசினர்.
அதோடு அதிமுகவினர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் பற்றி அவதூறாக பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டாக சென்று சென்னை K5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளரிடம் புகார் அளித்தனர்.
அதில்,”நான் அஇஅதிமுகவில் வடசென்னை வடக்கு(மே) மாவட்ட செயலாளர், எம்.ஜி.ஆர் இளைஞரணியில் பதவி வகித்து வருகிறேன். இன்று(நேற்று) பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மிகவும் அவதூறாக பேசியுள்ளார். இது அனைத்து அதிமுக தொண்டர்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட நினைத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் போன்மூலம் பேசி வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று(ஜனவரி 26) செய்தியாளர்களிடையே பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில துணை தலைவர் மற்றும் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசும்போது வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. அதன்பிறகு, அது தவறாக திரிக்கப்பட்டுவிட்டது. இதில் நயினார் நாகேந்திரனுக்கு கூட உடன்பாடு கிடையாது. இதற்கான வருத்தத்தை இன்று காலை செல்போன் மூலம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் பதிவு செய்தேன். ஓபிஎஸ்ஸிடம் பேச முடியவில்லை. அதிமுக மீது பாஜகவுக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. ஏனென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக இரு அவைகளிலும் பாஜக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களுக்கும், அதிமுக உறுதுணையாக இருந்துள்ளது. பாஜக இக்கட்டான நேரங்களில் இருந்தபோது அதிமுக உதவியுள்ளது.
அதிமுக-பாஜக உறவு என்பது இயற்கையான உறவு. இரண்டு பேருமே நிறைய கொள்கைகளில் ஒத்துபோகிறோம். சில விஷயங்களில் எங்களுக்குள் ஒத்துழையாமை இல்லாமல் இருந்தாலும் கூட இது இயற்கையான உறவு. இந்த உறவில் எந்தவொரு காரணத்திற்காகவும், சின்ன சலணம் கூட வரக் கூடாது என்பது இருகட்சி தலைவர்களின் நிலைப்பாடு. அதனால், நயினார் அண்ணன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. அதனால் இதை பெரிதுப்படுத்த வேண்டாம்.
எங்களை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுகிறது என்பதில் மாற்றுகருத்து கிடையாது. தொடர்ச்சியாக மக்கள் பிரச்சினைகளை எடுத்து பேசி வருகிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடுகள் விவகாரத்தில் சிறப்பாக அதிமுக போராடி வருகிறது ” என்று தெரிவித்தார்.
அண்ணாமலை இதுகுறித்து அதிமுக தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து நயினார் நாகேந்திரன் மீது கொடுக்கப்பட்ட போலீஸ் புகாரை திரும்பப் பெறுமாறு அதிமுக தலைமை கிருஷ்ணமூர்த்திக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாம் இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்த பொழுது…நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு வள்ளுவர் கோட்ட உண்ணாவிரதத்தில் ஏதோ திடீரென பேசப்பட்டதல்ல. அதற்கு முதல் நாள் 24 ஆம் தேதி கமலாலயத்தில் பாஜகவின் தமிழ்நாடு மைய குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமே அதிமுகவினர் தரும் தொந்தரவுகளை எதிர்கொள்வது எப்படி என்பது தான். அண்ணாமலை உட்பட பாஜக தலைவர்களை தொடர்பு கொள்ளும் அதிமுகவின் தலைமை நிர்வாகிகள்… தற்போதைய திமுக அமைச்சர்கள் மீது நிலுவையில் இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகளில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள். மேலும் தற்போது ரெய்டுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
அதேநேரம் பாஜகவின் பிரச்சினைகளில் கூட்டணி என்ற வகையில் அதிமுகவினர் உரிய ஆதரவை கொடுப்பதில்லை. பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு அலட்சியத்தை ஒட்டி தமிழக பாஜக போராட்டம் நடத்தியது. அதிமுக சார்பிலும் வலிமையாக போராட்டம் நடத்துமாறு பாஜக தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதிமுக அதை கண்டுகொள்ளவில்லை. தங்களது பிரச்சினைகளுக்காக பாஜகவின் உதவியை நாடும் அதிமுகவினர்… பாஜகவுக்காக எதையும் செய்யவில்லை என்ற வருத்தம் தமிழக பாஜக தலைவர்களிடம் இருக்கிறது.
அதுதான் மையக் குழு கூட்டத்திலும் எதிரொலித்தது. அந்தக் கூட்டத்தில் சிலர், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அதிமுகவை எல்லாவகையிலும் நாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சியை பலமாக வளர்ப்பதற்கு தனியாக நின்றாலும் தவறில்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்த விவாதத்தின் விளைவாகத்தான் நயினார் நாகேந்திரன் வள்ளுவர் கோட்ட உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவினரை அண்ணாமலையின் முன்னிலையில் கடுமையாக பேசியிருக்கிறார். இதற்கு அண்ணாமலை வெளிப்படையாக சொன்ன விளக்கம் ஒரு சமாளிப்பு நடவடிக்கைதானே தவிர, தமிழக பாஜகவுக்குள் அதிமுக கூட்டணி தேவையா என்ற கேள்வியின் தொடர்ச்சிதான் நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து” என்கிறார்கள் தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள்.
-**ஆரா, வினிதா**
[டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!](https://www.minnambalam.com/politics/2022/01/26/21/digital-thinnai-bjp-core-comitee-meeting-admk-chennai-corporation-ias-ips-act)
�,”