டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர் என்று அமைச்சர் காதர் மொய்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 40 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் வன்முறை நடந்த பகுதியை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் பார்த்து ஆய்வு செய்துவருகின்றனர். அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனும், வன்முறைப் பகுதியை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (மார்ச் 6) பேட்டியளித்த காதர் மொய்தீன், “வடகிழக்கு டெல்லியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 26 இடங்களில் பிப்ரவரி 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் கலவரம் நடைபெற்றது. இதில் 53 பேர் இறந்தனர். 422 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 122 வீடுகள், 322 கடைகள் சூறையாடப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் உள்ளன.
கலவரத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களை அழைத்து எங்களால் முடிந்த அளவு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கினோம். அதில் இருவர் இஸ்லாமியர்கள் அல்லாதோர். கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு உதவ முயன்றதால் அவர்கள் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக முதல்வர், பிரதமரை சந்தித்து பேச நினைத்தோம். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
டெல்லியில் இஸ்லாமியர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த வன்முறை அனைவருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என்றும் கூறிய காதர் மொய்தீன், “கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் உள்ளவர்கள் கிடையாது. வேறு பகுதிகளை சேர்ந்தவர்தான் கலவரத்தில் ஈடுபட்டனர் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்” என்றும் குறிப்பிட்டார்.
**எழில்**�,