60 -70 % வாக்குகளை அள்ள ‘அக்கா’ மம்தாவின் அடடே திட்டம்!

Published On:

| By Balaji

மேற்குவங்கத்தில் மும்முனைப் போட்டிதான் நிலவுகிறது என்றாலும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சியும் பாஜகவும் கடுமையாக மோதிக்கொள்கின்றன. முதலமைச்சர் மம்தா நந்திகிராம் தொகுதியில் காயம்பட்ட சம்பவத்தை அடுத்து, இரு தரப்பும் எதுகைமோனையாக பரஸ்பரம் ஏதாவது ஒன்றைப் பேசி சவால்விட்டபடி இருக்கின்றன. ஆனாலும் இதை மட்டுமே பேசி எட்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலை எதிர்கொண்டுவிட முடியாது என திரிணமூல் கட்சி நினைப்பதாகத் தோன்றவைக்கிறது, மம்தா நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

குறைந்த வருவாய்ப் பிரிவினர், பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறு-குறு-நடுத்தர தொழில்பிரிவினர் ஆகிய தரப்பினரை ஈர்க்கும் வாக்குறுதிகள் அதில் இடம்பிடித்திருப்பது, முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதில் முதன்மையானதாகப் பார்க்கப்படுவது, அனைத்து குடும்பத்தினருக்கும் அடிப்படை ஊதியம் தரும் திட்டம். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் முக்கிய இடம்பிடித்துள்ள இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகைத் திட்டத்தைப் போன்றதே இது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொதுப் பிரிவு குடும்பத்துக்கும் மாதம்தோறும் 500 ரூபாய், பட்டியல் சமூகத்தினருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; இது அந்தந்தக் குடும்பத்தின் பெண் தலைவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்கிறது அக்கட்சியின் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை.

இந்தத் திட்டத்தால் மேற்குவங்கத்தில் ஏறத்தாழ 1.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்படியான குடும்பங்கள் மட்டுமே 60 முதல் 70 சதவீதம்வரை இருக்கும் என்று அரசுப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

பட்டியல் சமூகத்தினரைப் பொறுத்தவரை இந்தத் திட்டத்தின்படி அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும். ஆனால் பொதுப்பிரிவினருக்கு நிபந்தனைகளுக்கு உள்பட்டது. இந்த நிதியுதவியைப் பெறும் பட்டியல் பிரிவினர் அல்லாத சமூகத்தினரின் குடும்பத்தில், வரிசெலுத்தக்கூடியவர் ஒருவர் இருந்தாலும் அவர்கள் இந்த நிதியுதவியைப் பெற முடியாது. மேலும், குறைந்தது 2 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கும் இந்த நிதியுதவி வழங்கப்படாது.

நம்ம ஊரைப் போல அறிவிப்புடன் நின்றுவிடாமல், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அரசாங்கத்துக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கணக்குப்போட்டுச் சொல்லியிருக்கிறது, திரிணமூல் கட்சி. அனைவருக்குமான அடிப்படை ஊதியத் திட்டத்தைச் செயல்படுத்தினால் இப்போதைக்கு 12, 900 கோடி ரூபாய் செலவாகும் என்கிறது ’அக்கா’ (எனப் பொருள்தரும் வங்கச் சொல்லான தீதி என அழைக்கப்படும்) மம்தா கட்சியின் இந்தத் தேர்தல் அறிக்கை.

மேலும், மாணவர்களுக்கு ரூ.10 லட்சம்வரை 4 சதவீத வட்டியுடன் கடன்பெறக்கூடிய வகையில் கடன் அட்டை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை, நகர்ப்புறங்களில் 5 லட்சம் குறைந்தவிலை வீடுகள், ஊரகப் பகுதிகளில் 25 லட்சம் குறைந்த விலை வீடுகள், கூடுதலாக 47 லட்சம் குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் என வேறு பல வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.

இலவசம், சலுகை என்றில்லாமல், தொழில்துறையை வளர்ப்பதன் மூலமாக வேலைவாய்ப்பை அளித்து வாழ்வாதாரத்தைப் பெருக்கும்படியாக, சிறு-குறு-நடுத்தர தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக அதிகரிப்பதும் ஆண்டுதோறும் 2000 பெரிய தொழிலகங்களை உருவாக்குவதும் திரிணமூலின் திட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

இவை ஒரு பக்கம் இருக்க, வங்கத்தில் இதுவரை இல்லாதவாறு, முதல் முறையாக சாதி தொடர்பான நிலுவைக் கோரிக்கைகளும் இடம் பிடித்துள்ளன. பட்டியல் சமூகத்தினருக்கு மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவில் வரும் பல சாதியினருக்கு, பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர்- ஓ.பி.சி. எனும் அங்கீகாரம் அளிக்கப்படாமல் இருக்கிறது; இதனால் மத்திய அரசு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட பல சமூகத்தினருக்கு இடமே கிடைப்பதில்லை. இதையொட்டி, “ மகிசியா, டிலி, டாமுல், சாகா போன்ற சாதியினரை பி.பி.ச. (ஓபிசி) பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆய்வுசெய்து, பரிந்துரைக்க தனி சிறப்புக் குழு அமைக்கப்படும்” என்று மம்தா கூறியிருப்பதும் முக்கியமானது.

மற்ற எல்லாவற்றையும் தாண்டி, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கான வாக்குறுதிகளைத் தராமல் இருப்பாரா மம்தா?

நல்ல தரமான சாலைகள், ஓரளவு நியாயமான கட்டணத்தில் உரிய மின்சார வசதி, குழாய் மூலம் குடிநீர் ஆகியவை உள்பட இன்னும் சிறப்பான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நவீன மாதிரி நகரமாக நந்திகிராமை உருவாக்கிக் காட்டுவேன் என உறுதிதந்திருக்கிறார், மம்தா பானர்ஜி. நந்திகிராமை உள்ளடக்கிய மாவட்டத்தின் தலைநகரான கிழக்கு மிதினாப்பூருக்கு ”ஒரு பல்கலைக்கழகத்தையும் கொண்டுவருவேன்” என்பது அவருடைய இன்னொரு முக்கிய வாக்குறுதி.

இவை எல்லாமே உண்மையில் நடக்கலாம் என்றோ இவற்றில் ஏதாவது ஒன்றாவது நடக்கலாம் என்றோ வங்கத்து வாக்காளர்கள் நம்பிவிட்டால், மமதா சமத்துதான்!

-** இளமுருகு **

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share