நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் : தமிழ்நாடு எந்த இடம்?

Published On:

| By Balaji

இந்தியாவில் சிறந்த நீர்வள மேலாண்மை நடைமுறைகளை கடைபிடிக்கும் மாநிலங்களை ஊக்குவிக்கும் விதமாக 2018ஆம் ஆண்டு முதல் ஜல் சக்தி அமைச்சகத்தால் தேசிய நீர் மேலாண்மை விருது வழங்கப்பட்டு வருகிறது.

2020 ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலை இன்று(ஜனவரி 7) டெல்லியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார்.

நீர்வளத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில், உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. அந்த பிரிவில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

தென் மாநிலங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி இரண்டாம் இடத்தையும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் அடிப்படையானது. இந்தியாவின் தற்போதைய தண்ணீர் தேவை, ஆண்டுக்கு சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2050ஆம் ஆண்டில், 1,447 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும். உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடான இந்தியாவிற்கு, தண்ணீர் வளம் மிக முக்கியமானது என்று கூறினார்.

உலகின் மொத்த மக்கள் தொகையில் 18% பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில், உலகின் புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளத்தில் 4% தான் இந்தியாவில் உள்ளது. இந்த பின்னணியில்தான், சிறந்த நீர் மேலாண்மை கொள்கைகளை கடைபிடிக்கும் மாநிலங்கள், மாவட்டங்கள், தனிநபர்கள், அமைப்புகள் போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறந்த நீர் பயன்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற அவர்களை ஊக்குவிக்கவும் உதவியாக உள்ளது” என்று கூறினார்.

2019ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மை விருதுகளில் தமிழகம் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share