திமுக அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்திய அதிமுக எம். எல்.ஏ , தான் அதிமுகவில் இருந்து விலகமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளார்.
நேற்று டிசம்பர் 17ஆம் தேதி மின்னம்பலம் மாலை பதிப்பில் [அலேக்கா தூக்கு 15 எம் எல் ஏ! அதிமுக எம் எல் ஏ களுக்கு திமுக இலக்கு]( https://www.minnambalam.com/politics/2021/12/17/30/minister-mrk-paneerselvam-meet-admk-mlas-DMK-target-to-AIADMK-MLAs) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போட்டு அந்தக் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை உண்டாக்க திமுக தரப்பில் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. சில அமைச்சர்களுக்கு தலைமை யிலிருந்து இது தொடர்பாக பிரத்யேகமான வேலைத்திட்டம் தரப்பட்டிருக்கிறது. .
தர்மபுரி மாவட்டத்திற்கு கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் வேளாண துறை அமைச்சருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் இதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
டிசம்பர் 15 ஆம் தேதி அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம். எல். ஏ. கோவிந்தசாமி மற்றும் அரூர் தொகுதி அதிமுக எம். எல். ஏ. சம்பத் இருவரையும் தனியாக சந்தித்தார். மறுநாள் டிசம்பர் 16ஆம் தேதி, தர்மபுரி அதியமான் ஹோட்டலில் தங்கியிருந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை, அதிமுக எ.ம் எல். ஏ. கோவிந்தசாமி தனியாக சந்தித்து பேசிவிட்டு வந்தார் என்ற செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தோம்.
நாம் வெளியிட்ட செய்தி அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டது. திமுக அமைச்சரை அதிமுக எம். எல். ஏ. க்கள் சந்தித்த தகவல்களை போட்டோ ஆதாரத்துடன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுக மாவட்டச் செயலாளருமான முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கும் அனுப்பினர் லோக்கல் அதிமுகவினர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, கே.பி அன்பழகனைத் தொடர்புகொண்டு உரத்த குரலில் கேட்டுள்ளார். உடனே கோவிந்தசாமி எம். எல். ஏ.வை தன் வீட்டுக்கு அழைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் கடுமையாகப் பேசியுள்ளார். அதற்கு, “சத்தியமாக நான் திமுகவினர் யாரையும் சந்திக்கவில்லை” என்று தாய் தந்தை மீது சத்தியம் செய்தவர், “நான் கட்சிக்கு துரோகம் செய்யமாட்டேன். நன்றியுடன் இருப்பேன்” என்று கண்களை கசக்கியபடி அன்பழகனிடம் சொல்லிவுட்டு வீடு திரும்பினார் கோவிந்தசாமி.
எடப்பாடி உத்தரவின் பேரில் விளக்க அறிக்கையை வெளியிடுமாறு கோவிந்தசாமியை வலியுறுத்தினார் கே.பி.அன்பழகன். அதன்படியே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் பாப்பிரெட்டி பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, அந்த வீடியோவில்,
“நான் திமுக அமைச்சரை தனியார் லாட்ஜில் நேரில் சந்தித்ததாக திமுகவினர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். நான் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவன். அம்மாவின் நல்லாசியோடு எம்ஜிஆரின் நல்லாசியோடு எடப்பாடி, ஓ.பன்னீர், மண்ணின் மைந்த கே.பி. அன்பழகன் ஆசியோடு வெற்றிபெற்றவன்.
என் தகப்பன் ஆறுமுகம்தான் தவிர வேறு யாரும் இல்லை. அதுபோல அதிமுக ஒன்றுதான் என் கட்சி. உயிர் இருக்கும் வரை அதிமுகவில்தான் இருப்பேனே தவிர, வேறு கட்சிக்குப் போகமாட்டேன். இனி என் மீது யாராவது தவறான தகவலைப் பரப்பினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மானநஷ்ட வழக்குத் தொடருவேன் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்திலும் திமுக வை கடுமையாகப் பேசியிருக்கிறார் கோவிந்தசாமி.
**-வணங்காமுடி**
�,