wதிமுகவிலிருந்து விலகுகிறாரா வி.பி.துரைசாமி?

politics

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தன்னைப் பற்றி சிலர் தவறான தகவல்களைத் தருவதாக வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்று தமிழக பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்தார். முரசொலி விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக விசாரணையைத் தீவிரப்படுத்தியவர் இப்போதைய பாஜக தலைவரும், அப்போதைய தேசிய பட்டியலினத்தோர் ஆணையத் துணைத் தலைவருமான முருகன். அவரை திமுகவில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் நேரில் சந்தித்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. திமுகவில் அவர் அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவலும் வெளிவரத் துவங்கியது.

இதுதொடர்பாக [திமுகவில் மரியாதை இல்லை! – வி.பி. துரைசாமி -முருகன் சந்திப்பு பின்னணி!](https://www.minnambalam.com/politics/2020/05/19/19/vp-duraisamy-meet-bjp-leader-murugan-behind-story) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், “சந்திப்பு தொடர்பாக தனக்கு நெருக்கமான திமுக புள்ளிகளிடம் பேசிய வி.பி.துரைசாமி, ‘தம்பீ… நாமக்கல் மாவட்டத்துல நான் துணைப் பொதுச் செயலாளர்னு இருக்கேன். காந்தி செல்வனை போட்டப்பயும் என்னைக் கேக்கல. இப்ப ராஜேஸ்குமாரை போட்டப்பவும் என்னைக் கேக்கலை. இதே நேரு மாவட்டமோ, ஐபி மாவட்டமோ இருந்தா இப்படி நடக்குமா தம்பி?’ எனக் கேள்வி எழுப்பினார்” என்று கூறியிருந்தோம். ராஜ்யசபா உறுப்பினர் சீட்டும் தரவில்லை எனத் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டோம்.

இந்த நிலையில் இந்து தமிழ் திசைக்கு இன்று (மே 21) அளித்த பேட்டியில் இவற்றை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் வி.பி.துரைசாமி.

.நாமக்கல் மாவட்டச் செயலாளர்கள் மாற்றங்களில் உங்களுக்கு அதிருப்தி இருந்ததாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அது அவர்கள் கட்சி. அதில் நான் ஒரு ‘சர்வண்ட்’. என்றபோதும் சிலரை மாற்றும்போது என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்பதில்லையே என்று சிறு வருத்தம் இருந்தது உண்மைதான். அது கட்சிக்கு வெளியே கூட எல்லோருக்கும் தெரியும். இதே விஷயத்தில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகனை மீறி நடப்பார்களா?” என்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அதுபோலவே ராஜ்யசபா சீட்டுக்காக உதயநிதி ஸ்டாலினை சந்தித்தாகவும் கூறியவர், கட்சியிலிருந்து நீக்கினாலும் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது எனத் தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் புதிய தலைமுறை ஊடகத்திற்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி, “இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அனைவரும் சாதி அரசியல்தான் செய்கிறார்கள். அந்த வகையில் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு வாழ்த்து சொல்ல, மனதில் எந்தவித சலனமும் இல்லாமல் திமுக கரைவேட்டிக் கட்டிக்கொண்டு வெளிப்படையாகவே சென்றேன். முரசொலி விவகாரத்தில் யார் மனு அளித்தது, யார் விசாரித்தது உள்ளிட்ட எந்த விவரமுமே எனக்குத் தெரியாது” என்று தெரிவித்தார்.

சாதி ஒழிந்துவிட்டது என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால், பதவி கொடுப்பார்களா என்றால் மாட்டார்கள் என்பதே உண்மை என்றும் குறிப்பிட்ட துரைசாமி, “ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பொறுப்பேற்றுள்ள ஒருவருக்கு வாழ்த்துக்கள் சொல்வது தவறு என்று சொல்வது சரியல்ல. ஆனால், தேவையில்லாமல் ஒருசிலர் தலைவருக்கு தவறான தகவல்களை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக நான் தினம் தினம் அழுதுகொண்டிருக்கிறேன். இதுகுறித்து தலைவர்தான் புரிந்துகொள்ள வேண்டும். அவர் என்ன முடிவெடுத்தாலும் சரி” என்றும் கூறினார்.

நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று சொல்கிற தைரியம் உங்களுக்கு வரவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “சந்திப்பை இருவருக்கும் இடையிலான உரையாடல் என்று தலைவர் நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால் பிரச்சினையில்லை” என்று கூறினார்.

வி.பி.துரைசாமியின் கருத்துக்கள் அவர் திமுகவில் அதிருப்தியில் இருப்பதையே காட்டுகிறது.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *