வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையமும் நாடாளுமன்றமும் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சைலப்ப கல்யாண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களையும், இரட்டை பதிவுகளையும் நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு இன்று (ஜூலை 17) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை நீக்கும் வகையில் அவர்களின் இறப்பு சான்றிதழ்களில் ஆதார விவரங்களை இணைக்கலாம் என்றும் அதன்மூலம் இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றமும் தேர்தல் ஆணையமும் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் மனுதாரரின் யோசனையைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
அப்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் சிறந்த நடைமுறையைத் தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
**-பிரியா**
�,