முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தனர். இதன் பின் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், `ஆஸ்திரேலியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள கல்வி தொடர்பாக விவாதித்தோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது.
தமிழக ஆஸ்திரேலியா மாணவர்கள் இடையே தொடர்புகளை உருவாக்கி, கல்வி வளர்ச்சிக்காக அரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் பல்கலைக் கழகங்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா துணையாக இருக்கும்` என்று கூறினார்.
புதுவை மற்றும் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, இதுகுறித்து முதல்வர் மற்றும் சுகாதாரத் துறையுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர் பொன்முடி.
ஆகஸ்ட்1 முதல் ஆன்லைனில் கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும், அன்றைய தினம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்த அவர், ஸ்காலர்ஷிப் மற்றும் கல்விக் கடன் குறித்துத் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை போல் செயல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறினார்.
**-பிரியா**
�,