Kவிவேக் வீட்டிலும் வாசப்படி!

Published On:

| By Balaji

விவேக்கின் இதயத்தில் 100% அடைப்பு, முதல் அட்டாக்கிலேயே மரணம் என்று மருத்துவ உலகமே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும்படியான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

உலகமே புகழும் நகைச்சுவைக் கலைஞரின் இதயத்தில், வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று பலரது ஆரோக்கியத்தை பராமரித்த விவேக்கின் இதயத்தில் இப்படி ஒரு அடைப்பு எப்படி இத்தனை நாளாய் இருந்தது என்பதுதான் அவரது ரசிகர்களின், நண்பர்களின் ஆதங்கம்.

விவேக் என்னதான் வெளியே சிரிப்பின் அடையாளமாக திகழ்ந்தாலும் அவருக்குள்ளும் வாழ்க்கை சுமை மிகுந்த சோகங்களைக் கொடுத்திருக்கிறது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல விவேக்கின் குடும்பத்திலும் பிரச்சினைகள்.

அவரது குடும்ப நண்பர்கள் சிலரிடம் பேசியபோது,

“விவேக் ஜுனியர் அசிஸ்டென்ட் ஆக தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து, அப்படியே நாடகங்களில் நடித்து பாலச்சந்தர் கண்ணில் பட்டு சினிமாவுக்கு வந்தார். 92 இல் தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிடும் அளவுக்கு சினிமாவில் பிசியானார். குடும்பத்துக்கு தேவையான செல்வங்களை சினிமா மூலம் நன்றாகவே சம்பாதித்தார் விவேக். போயஸ் கார்டனில் பிளாட், வடபழனியில் இடங்கள் என்று சென்னைக்கும் சென்னைக்கு வெளியிலும் நிறைய சொத்துகளை வாங்கிப் போட்டார்.

விவேக்குக்கு இரு சகோதரிகள். ஒரு அக்கா, ஒரு தங்கை. தங்கை மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். அவரது கணவர் அரசு ஊழியர். அக்கா டாக்டராக இருக்கிறார். ஃபார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம்தான் விவேக் அக்காவின் கணவர்.விவேக்கின் மனைவிக்கும் சகோதரிகளுக்கும் பெரிய அளவு இணக்கம் இல்லை. எல்லா வீட்டிலும் நடப்பதுதான் இது என்றாலும் விவேக் இதனால் ரொம்பவே மனமுடைந்தார். இரு பெண், ஒரு ஆண் மூன்று குழந்தைகள் ஆன பிறகும் இந்தப் பிரச்சினையால் விவேக் ஒரு கட்டத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்யலாமா என்று கூட யோசித்து தன் நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசினார்.

விவேக் மனைவியின் தாய் மாமா பர்மா பஜாரில் கடை வைத்திருக்கிறார். சென்னையில் ஃபைனான்ஸ் தொழில் செய்கிறார். அவர் உள்ளிட்ட உறவினர்கள் சமாதானம் பேசி விவேக்கின் அந்த முடிவை கைவிடச் செய்தார்கள். இப்படி அந்த பிரச்சினை ஒருவழியாக முடிந்த நிலையில்தான் அவரது மகன் அநியாயமாக 13 வயதிலேயே மரணம் அடைந்தார். இது விவேக்கை ரொம்பவே பாதித்தது. மிகக் கடுமையாக பாதித்தது. நகைச்சுவை ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கும்போதே திடீரென மகனை நினைத்து அழுது அப்படியே மூடிவிடுவார்.

புத்திர சோகத்துக்குப் பின்னால் மீண்டும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றபோது விவேக்கின் மனம் சற்று இலேசானது. பழைய சோகங்களை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய உலகத்துக்குள் பிரவேசித்தார். ஆனாலும் மகனின் இழப்பு அவரை மிகப்பெரிய பள்ளத்தில் தள்ளியதை அவருக்கு நெருக்கமானவர்களே உணர்ந்தார்கள். அவரது மகனுடைய இழப்புதான் அவரை மெல்ல மெல்ல இப்படி ஒரு இதய பாதிப்பை நோக்கி இட்டுச் சென்றுவிட்டது” என்கிறார்கள் விவேக்கின் குடும்ப நண்பர்கள்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share