’பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குகள்’: வினிஷா உமாசங்கர்

politics

பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் உலக தலைவர்கள் மீது தங்கள் தலைமுறையினர் கோபமாகவும், விரக்தியாகவும் இருப்பதாக கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பேசிய வினிஷா உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர்(14) என்பவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை உருவாக்கினார். ரூ.40 ஆயிரம் செலவில் இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் விருதுகள் வழங்கப்பட்டன.

பருவநிலை மாற்றத்தில் சுற்றுச்சூழலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களுக்கு பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு விருதுக்காக இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் வினிஷா உமா சங்கரும் ஒருவர். இதையடுத்து பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 climate summit மாநாட்டில் தூய்மை தொழில்நுட்பம் குறித்து பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் நேற்று(நவம்பர் 2) வினிஷா உமாசங்கர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,” உங்களது இன்றைய செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகளை நானும் என் தலைமுறையினரும்தான் சந்திக்கப் போகிறோம். பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்த தலைவர்கள் மீது எங்கள் தலைமுறையினர் கோபமும், விரக்தியும் அடைந்துள்ளனர். கோபப்படுவதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால், எனக்கு கோபப்படுவதற்கு நேரம் இல்லை. நான் செயல்பட விரும்புகிறேன்.

நான் இந்தியாவைச் சேர்ந்தவள் மட்டுமல்ல. நான் இந்த பூமியைச் சேர்ந்தவள். அதில், நான் பெருமை அடைகிறேன். நான் ஒரு மாணவர், கண்டுபிடிப்பாளர். சுற்றுச்சூழல் ஆர்வலர், தொழில்முனைவோர். குறிப்பாக, நன்மையில் நம்பிக்கையுள்ளவள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,” மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு, செயலில் இறங்குகள். எகோ ஆஸ்கர் விருதை வென்றவர்கள் மற்றும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளுக்கு ஆதரவு அளியுங்கள்.

புதைபடிம எரிபொருள்களால், புகையால், மாசுபாட்டால் கட்டமைக்கப்பட்ட பொருளியல்களை ஆதரிக்கக் கூடாது. பழைய விவாதங்களை பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவையாகவுள்ளது. எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்யுங்கள்.

நாங்கள் குறைக் கூறுவதை தேர்ந்தெடுக்காமல், ஆரோக்கியமாகவும், வளமாகவும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க போகிறோம். இது எளிது என்பதால் இல்லை,கடினம் என்பதால் இதை தேர்வு செய்கிறோம். இந்த சவால்கள் அனைத்தும் இளம்தலைமுறையினருக்கான நல்ல எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.

எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் சார்பாக. எங்களுடன் துணை நிற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் பழைய சிந்தனை முறைகளையும், பழைய பழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எங்களுடன் நீங்கள் சேராமல் இருந்தாலும் நாங்கள் முன்னேறி செல்வோம். நீங்கள் தாமதித்தாலும் நாங்கள் துரிதமாக செயல்படுவோம். நீங்கள் கடந்த காலத்திலே நின்றாலும், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவோம். எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. இதற்காக பின்னாளில் வருத்தப்படமாட்டீர்கள் என்பதை உறுதியாக சொல்கிறேன்“ என்று கூறினார்.

இறுதியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்..பருவநிலை மாற்றத்தில் ஸ்டாப் என்ற பட்டன் கிடையாது. ரீவைண்ட் செய்வதற்கும் நம்மிடம் அதிகாரம் இல்லை. அதனுடைய போக்கில்தான் நாம் எதிர்காலத்தை நோக்கி செல்ல முடியும். அதனால், ஒன்றாக இணைந்து இதில் செயல்படும்போது கண்டிப்பாக நாம் வெற்றிபெறுவோம்” என்று கூறி தனது உரையை முடித்தார்.

இவரது பேச்சிற்கு அரங்கில் கூடியிருந்த உலகத் தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.

இதுகுறித்து இளவரசர் வில்லியம் ட்விட்டரில்,” எர்த்ஷாட் வெற்றியாளர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்கள் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான, அவர்களின் தீர்வுகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக, உலகத் தலைவர்கள் முன் வினிஷா உமாசங்கர் பேசுவதைப் பார்ப்பதில் பெருமை அடைகிறேன். அவர் மாற்றத்தை விரும்புகிறார். இதனால் அவரது தலைமுறை சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்றம் குறித்து அமெரிக்க முன்னாள் பிரதமர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாதையில் பயணிக்கும் வினிஷா உமாசங்கரை” இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்” என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *