இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று (டிசம்பர் 8) குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததாக இந்திய விமானப் படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று காலை டெல்லியில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்துக்குச் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அங்கிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் வெலிங்கடன் ராணுவ பயிற்சிப் பள்ளியில் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டார். இந்த நிலையில் இலக்கை அடைய 10 நிமிடம் இருந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. முப்படைகளின் தலைமைத் தளபதியின் நிலை என்ன என்ற கேள்வி இந்தியா முழுதும் எதிரொலித்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய மரணச் செய்தியை இந்திய விமானப் படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு விமானப் படை விடுத்துள்ள செய்தியில்,
“இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் மற்றும் 11 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் துரதிர்ஷ்டமாக விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தார்கள் என்பது ஆழ்ந்த வருத்தத்தோடு உறுதி செய்யப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் பயணித்த கேப்டன் வருண் சிங் படுகாயங்களோடு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று வெலிங்டன் ராணுவ அகாடமியில் பயிற்சி பெறும் அலுவலர்களிடையே உரை நிகழ்த்துவதற்காக பயணம் மேற்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர் வருண் சிங்தான். அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக முதன் முறையாக கடந்த 2019 இல் நியமிக்கப்பட்ட பிபின் ராவத் தின் மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
**-வேந்தன்**
�,