தமிழகம் முழுவதும் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க விநாயகர் சிலைகளை நிறுவுவது, விநாயகர் சிலை ஊர்வலம், நீர் நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விழா நடைபெறும் என அறிவித்தார்.
இந்த நிலையில் தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம் என்ற இந்து முன்னணி மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 17) வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த இளஞ்செழியன் தாக்கல் செய்த மனுவில், “1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் என்று கூறிய இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க சாலைகள், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “விநாயகர் சதுர்த்தி விழாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கைவினை கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அரசின் உத்தரவுக்குத் தடை விதித்து, நிபந்தனைகளுடன் தெருக்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவைத் தடை செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக பாஜக சார்பிலும் முறையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், “40 ஆண்டுக் காலமாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை, அரசின் சட்டத்திற்கு உட்பட்ட சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி கேட்டிருக்கிறோம். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவிப்பதாக முதல்வர் கூறியுள்ளார். அரசின் நிபந்தனைகளுக்கு ஏற்ப வழிபட்டு சிலைகளைக் கரைப்பதாகச் சொல்லியிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தடை நீங்குமா அல்லது நீடிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.
**எழில்**
�,