காவல் துறையில் உள்ள எழுத்தர், எஸ்.ஐ மற்றும் இன்ஸ்பெக்டர்கள் யார் யார், எதற்கெல்லாம், எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற பட்டியலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளார் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 காவல் நிலையம் உள்ளது. மூன்று டிஎஸ்பி, ஒரு எஸ்பி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 30 காவல் நிலையமும், 4 டிஎஸ்பி ஒரு எஸ்பியும் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 46 காவல் நிலையமும், 7 டிஎஸ்பி, ஒரு எஸ்பியும் உள்ளனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மூன்று மாவட்டம் சேர்ந்ததுதான் விழுப்புரம் சரகம், அதன் டிஐஜி பாண்டியன், இந்த மாத தொடக்கத்தில் மூன்று எஸ்.பி.களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உடனடியாக சில விபரங்களைக் கேட்டுள்ளார்.
காவல் நிலையங்களுக்கு வரும் மக்களின் குறைகளைத் தீர்க்காமல் அவர்களிடம் பணம் பெறுவதும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் வியபாரிகளிடம் மாமூல் வசூலித்து வருவதும், தொடர் புகாராக இருந்து வருகிறது, இதனால் காவல் துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது. அந்த போக்கை மாற்றி மக்களுக்கு காவல்துறையின் மீது அழுத்தமான நம்பிக்கை வரவேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள எழுத்தர் எவ்வளவு வாங்குகிறார், எஸ்.ஐ எவ்வளவு வாங்குகிறார், இன்ஸ்பெக்டர் எவ்வளவு வாங்குகிறார் என்ற விபரத்தை எஸ்.பி.க்களிடம் அனுப்பி அதைக் கண்காணித்து விபரமான பட்டியல்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதன்படி,
**காவல் நிலைய எழுத்தர் வசூல் விபரம்**
*பாஸ்போர்ட் லைசன்ஸ் பெற என்ஒ சி பெறுவதற்கு (தடையில்லா சான்று) ரூ.500 முதல் 1000 வரை
* கரண்ட் பேப்பர், அதிகாரிகள் பரிந்துரை செய்யப்பட்ட மனு விசாரிக்க ரூ.1000
* தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களிடம் ரூ.1000
* சட்டவிரோத சரக்கு விற்பனையாளர்களிடம் தலா ரூ.200
*ஸ்டேஷன் பெயிலில் விடுவதற்கு ரூ.200
*எஃப் ஐ ஆர் நகல் வழங்க ரூ.100
**உதவி ஆய்வாளர் வசூல் **
*சிவில் மேட்டருக்கு ரூ. 5000 முதல் 10000 வரை
* லாட்டரி விற்பனை செய்பவர்களிடம் ரூ.3000 முதல் 5000 வரை
*சூதாட்டம் விளையாடுபவர்களிடம் ரூ.1000 முதல் 5000 வரை
*மணல் கொள்ளையர்களிடம் ரூ.5000 முதல் 30000 வரை
* விபத்து வழக்கில் காவல் நிலையத்திலேயே பெயிலில் விடுவதற்கு ரூ2000 முதல் 5000 வரை
* குட்கா விற்பனையாளர்களிடம் ரூ.2000
* சட்டவிரோதமாக ஒயின் ஷாப்பில் விற்பனையாளர்களிடம் ரூ. 2000
* அனுமதி இல்லாத பார் நடத்துபவர்களிடம் ரூ.2000
*வீதியில் சண்டைபோட்டுக்கொள்பவர்களிடம் ரூ. 2000
*சாலை சோதனையில் ரூ.2000
**இன்ஸ்பெக்டர் வருமானம்**
இடம் பிரச்சனையாக வருபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 ஒரு லட்சம் வரை… அதுமட்டுமின்றி சொத்துக்கு ஏற்றது போல் வசூலும் உயரும்,
* கரண்ட் பேப்பர் விசாரணைக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில்.
* விடுதிகளில் தலா ரூ.2000
*ப்யூட்டி பார்லர் ஸ்பா நடத்துபவர்களிடம் ரூ. 5000
*தாபா ஹோட்டல்களில் ரூ 3ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை
* கிரானைட் குவாரிகளில் ரூ.10000
*மணல் கடத்தல் செய்பவர்கள் மூலமாக ரூ.20 ஆயிரம்
* நடமாடும் பார் நடத்துபவர்களிடம் ரூ.2000
சட்டவிரோதமாக சரக்கு பாட்டில்கள் விற்பனை செய்பவர்களிடம் ரூ.10ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை
**எஸ்.பி தனிப்பிரிவு போலீஸார் செய்யும் வசூல்**
* சந்து கடையில் சட்டவிரோதமாக சரக்கு விற்பனையாளர்களிடம் தலா ரூ.500 முதல் 1000 வரை
*தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்க அனுமதி கொடுக்க ரூ.5ஆயிரம்
*சூதாட்டம் செய்பவர்களிடம் ரூ.1000 முதல் 3000 ஆயிரம் வரை
*தாபா ஹோட்டல்களில் ரூ. 500 முதல் 2000 வரை
*மணல் கடத்தல்காரர்களிடம் ரூ.3ஆயிரம் முதல்ரூ. 5ஆயிரம் வரை
*அனுமதியில்லாத பார் நடத்துபவர்களிடம்ரூ 500
*டாஸ்மாக் கடைகளில் ரூ.500 முதல்ரூ. 2000 ஆயிரம் வரையில் மாமூல் வாங்குவதாக பட்டியல் சென்றுள்ளது.
இதில் தினம் மாமூல், வாரம் மாமூல், மாதம் மாமூல், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை மாமூல், என்று வசூலிக்கப்படுகிறது.
இதைப் பற்றி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தோம்,
“டிஐஜி கேட்டுள்ள ரிப்போர்ட் உண்மைதான்… இந்த பட்டியல்களை எஸ்பியிடம் அனுப்பி ரிப்போர்ட் கேட்டதும் பலர் பயந்துபோய் லஞ்சம் வாங்க தயங்குகிறார்கள். பண்ருட்டி உள்ளிட்ட இடங்களில் இன்ஸ்பெக்டர்கள் எதற்கும் பயப்படாமல் காவல் நிலையத்திலேயே வரச்சொல்லி வசூலிக்கிறார்கள்” என்றார்.
மாமூல் வாங்குவதை நிறுத்தினால் சத்தியமாகக் குற்றங்கள் நடக்காது. போலீஸார் மாமூல் வாங்குவதால்தான் சமூக விரோதிகள் அச்சம் இல்லாமல் தைரியமாக குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதேபோல் உளவுத்துறை என்று சொல்லக்கூடிய கீழ் மட்டத்தில் உள்ள எஸ்பிசிஐடி,போலீஸார் மற்றும் எஸ்பி தனிப்பிரிவு போலீஸார் நேர்மையாகவும் லஞ்சம் வாங்காமல் செயல்பட்டால் காவல்நிலையத்தில் உள்ள ஏட்டு, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள் யாரும் மாமூலும் வாங்கமாட்டார்கள், லஞ்சமும் வாங்கமாட்டார்கள் என்றார்.
மூன்று மாவட்ட எஸ்.பி,களும், தங்கள் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வசூல் வேட்டை செய்யும் ரைட்டர் எஸ்.ஐ இன்ஸ்பெக்டர்கள் பட்டியலை எடுத்து டிஐஜிக்கு அனுப்பிவிட்டார்கள். டிஐஜி முயற்சிக்கு உயர் அதிகாரிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களோ அந்த அளவுக்கு மாநிலத்தில் மாடல் சரகமாக விழுப்புரம் சரகம் மாறலாம்.
**-வணங்காமுடி**
�,”