iகிராமசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!

Published On:

| By admin

ஏப்ரல் 24ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ஆகிய நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கிராம சபை கூட்டத்தில், அந்தந்த ஊராட்சிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன், ஊரக பகுதி மக்களின் குறைகளும் தீர்த்து வைக்கப்படும்.

இந்நிலையில் கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக கொரோனா காரணமாகக் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து 2021 அக்டோபர் 2 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமசபைக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடக்க இருந்த கிராம சபை கூட்டம் கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், பஞ்சாயத் ராஜ் தினமான ஏப்ரல் 24 ஆம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்க உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்பட்ட விவரங்களை meetingonline.gov.in தளத்தில் பதிவு செய்யவும், இக்கூட்டம் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share