விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?: மியாட் மருத்துவமனை!

politics

விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளரும், நடிகருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு உடல் பரிசோதனை செய்ய வந்தபோது, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதாகவும் தற்போது நலமுடன் இருக்கிறார் எனவும் தேமுதிக தெரிவித்தது.

இந்த நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாகம் இன்று (செப்டம்பர் 24) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு நடத்தப்பட்ட சோதனையில் கடந்த 22 தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தது.

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டரில், “தேமுதிக பொருளாளர் பிரேமலதாவிடம் விஜயகாந்த் உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தேமுதிக தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்” என திமுக தலைவர் ஸ்டாலின் தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை, “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சகோதரர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனிடையே விஜயகாந்த் பெயரிலான ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் நலம்பெற்று வர வேண்டுமெனவும் பலரும் ட்விட்டரில் வாழ்த்து பகிர்ந்து வருகிறார்கள்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.