k2வது சம்மனை தொடர்ந்து ஆஜரான விஜயபாஸ்கர்

Published On:

| By Balaji

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜரானார்.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தான் அமைச்சராக இருந்த பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து கடந்த ஜூலை 22ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 25.56 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து கடந்த 19ம் தேதி இரண்டாவது முறையாக விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது. அதில் அக்டோபர் 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share