சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு!

Published On:

| By Balaji

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

முதல்வரும் , திமுக தலைவருமான ஸ்டாலின் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அந்த வகையில் மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. ஜூலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்ட்டில் எஸ்,பி.வேலுமணி, செப்டம்பரில் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 18) சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் 8 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றம்சாட்டி புகார் மனு அளித்தார்.

அதில், சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டியிருந்தது. இதுதவிர அவர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில், சி.விஜயபாஸ்கள் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று காலை முதலே அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் சோதனை தொடங்கியுள்ளது.

விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல்குவாரி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share