சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று (ஜூலை8) காலை முதல் அதிரடியாய் நுழைந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர், சென்னை, கோவை திருச்சி என 49 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடக்கிறது.
அதில் ஓர் இடமாக சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காமராஜ் நிறுவனத்தின் ஆடிட்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென வருமான வரித்துறையினரும் ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்த வந்தனர். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்தபோது, ஏற்கெனவே கடந்த 3 நாட்களாக அரசு ஒப்பந்தக்காரர் செய்யாதுரை நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களும் இன்று ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்த வந்துள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் காமராஜ் நிறுவனத்திற்கும், அரசு ஒப்பந்தக்காரர் செய்யாதுரை நிறுவனத்திற்கும் ஒரே ஆடிட்டர் என்பது தெரிய வந்துள்ளது.
– கிறிஸ்டோபர் ஜெமா