தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ரகசியமாக காசிக்கு பயணம் செய்துவிட்டுத் திரும்பியுள்ளார்.
சமீபத்தில்…. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் தங்களது ரகசிய பயணங்களைச் சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லாமல், பெங்களூர் விமான நிலையத்திலிருந்து மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வரிசையில் விஜயகாந்தும் இப்போது சேர்ந்துள்ளார்.
உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவர்கள் ஆலோசனைகள்படி மாத்திரை, மருந்து எடுத்து வருகிறார். சிறுசிறு உடற் பயிற்சிகளும் மூச்சு பயிற்சிகளும் செய்துவருகிறார்.
இந்த நிலையில் ஜோதிடர்கள் பிணியை நீக்க, ஆயுள் நீடிக்க, கெடு பலன்கள் தீர, உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிக்குச் சென்று கங்கை நதியில் புனித நீராடிவிட்டு, சிவனை தரிசித்துவிட்டு வரச் சொல்லியுள்ளார்கள். மேலும் கங்கை நதிக்கரையில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) திவசம் கொடுத்தால் பெரும் புண்ணியமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜோதிடர்களின் ஆலோசனைப்படி காசிக்குப் பயணம் மேற்கொண்டார் விஜயகாந்த்.
காசியில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் லால் பகதூர் விமான நிலையத்துக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் விமான சேவை இருந்தாலும்… விஜயகாந்த் சென்னையில் இருந்து செல்லாமல், வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள் மட்டுமே விமானச் சேவையிருக்கும் பெங்களூர் விமானநிலையத்திலிருந்து ஜனவரி முதல் வாரத்தில் சென்றுள்ளார். அவரோடு உதவியாளரும் சென்றுள்ளார்.
பெங்களூருவில் இருந்து உத்திரப்பிரதேச மாநிலம் லால்பகதூர் விமான நிலையம் சென்றவர், அங்கிருந்து வாடகை காரில் பயணித்து காசி சென்றவர் இரவு தங்கியிருக்கிறார். மறு நாள் காலையில், கங்கை நதிக்குச் சென்று தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டு, சிவனைத் தரிசித்துவிட்டு விமானம் நிலையம் சென்றார். பெங்களூர் விமானம் நிலையம் வந்தவர் அங்கிருந்து சாலை வழியாக சென்னை சாலிகிராமம் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஜயகாந்த்.
**-வணங்காமுடி**�,