lவேலுமணியின் வேலை: இறக்கினார் இரண்டு ஆளை!

Published On:

| By Balaji

கட்சி வேலையானாலும், தேர்தல் வேலையானாலும் அமைச்சர் வேலுமணிக்கு நிகர் அவரேதான். மிரட்டிவிடுவார் மனிதர். அவருடைய அசாதாரணமான உயரமும், அசாத்தியமான துணிச்சலும் அவரைத் தனித்துக் காட்டும் அடையாளங்கள்.

தேர்தல் நேரத்தில் வேலுமணியின் வேலைகள் எப்படியிருக்கும் என்பது பற்றி, அதிமுக வட்டாரத்தில் நடக்கும் அனைத்து விவகாரங்களையும் அறிந்த மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

‘‘வேலுமணிக்கு எந்த டிபார்ட்மென்ட்டில் அல்லது எந்தக் கட்சியில் எங்கே ஆளிருக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் அவருக்குப் போக வேண்டிய தகவல்கள் அவ்வப்போது போய்விடும். திமுகவில் மட்டுமில்லை; பாரதிய ஜனதாவில், ஐடி டிபார்ட்மென்ட்டில் என அவருக்கு வேலை பார்க்கும் ஸ்லீப்பர் செல்கள் இல்லாத இடமேயில்லை என்று சொல்லலாம். சென்ற தேர்தலில், திமுகதான் ஜெயிக்குமென்று எல்லா கருத்துக் கணிப்புகளும் முன்பே சொல்ல ஆரம்பித்த நிலையில், தன்னை எதிர்த்து திமுக கூட்டணியில் யார் போட்டியிட வேண்டுமென்பதையும் அவரே தீர்மானித்தார்.

2016 தேர்தலில், அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் சையது முகம்மது நிறுத்தப்பட்டார். அவர் 45 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றார். வேலுமணி 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஒரு இஸ்லாமியக் கட்சி வேட்பாளருக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் முழுமையாக விழுந்திருந்தால் கூட இன்னும் அதிகமான வாக்குகள் விழுந்திருக்கும். ஆனால் விழவில்லை. அதற்குக் காரணம், அந்தத் தொகுதியை திமுக., தலைமையிடம் போராடிக் கேட்டுப் பெற வைத்ததே வேலுமணியின் வேலைதான். திமுக தலைமை வரைக்கும் இந்தத் தகவல் போனது. அதனால்தான் இந்த முறை கூட்டணிக் கட்சியினர் யாரையும் நிறுத்தாமல், அதேபோல உள்ளூர் ஆட்கள் யாரையும் நம்பாமல் வெளியூரிலிருந்து கார்த்திகேய சேனாதிபதியை கொண்டு வந்து இறக்கியிருக்கிறது திமுக தலைமை.

இதனால் எதிர்பார்த்ததை விட போட்டி சற்று கடுமையாகியிருக்கிறது. தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,கட்சி இருப்பதால் தொகுதியில் கணிசமாகவுள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் வேலுமணிக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமாகவுள்ளது. இத்தனைக்கும் வேலுமணி தன் சொந்தச் செலவில், பல கோடி ரூபாய் மதிப்பில் இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் கட்டித் தந்துள்ளார். இஸ்லாமிய ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு என எக்கச்சக்கமாக செய்து கொடுத்திருக்கிறார். அதற்காக அவரை இஸ்லாமியர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்கு ஒரே காரணம், அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா இருக்கிறது என்பதுதான்.

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இரண்டு அவைகளிலும் அ.தி.மு.க., வாக்களித்ததால்தான் அந்த சட்டமசோதா வென்றது என்ற பிரச்சாரத்தை, தி.மு.க.,வினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகள் இந்த முறை சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்குப் போவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. அதை உடைப்பதற்கு பலவிதமான யுக்திகளையும் வேலுமணி கையாள ஆரம்பித்துவிட்டார். அதில் ஒன்றுதான் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக இஸ்லாமியர் ஒருவர் நிறுத்தப்பட்டது. முதலில் அங்கு ஸ்ரீநிதி என்ற பெண்ணை நிறுத்துவதாக தகவல் பரவியது. திடீரென அவருக்கு பதிலாக ஷாஜகான் என்ற இஸ்லாமிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக கமல் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் கவனிக்கப்பட்டிருப்பதாகவும் வாட்ஸ்ஆப்களில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. கமலுக்கு இந்த விஷயம் தெரியுமா தெரியாதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. கமல் நேரடியாக இங்கு போட்டியிடுவதால், அவர் இங்கும் வந்து இஸ்லாமியர்கள் மத்தியில் பரப்புரை செய்யும் வாய்ப்புள்ளது. அப்படிச் செய்யும்பட்சத்தில் சில ஆயிரம் வாக்குகளாவது மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்குக் கிடைக்கலாம். அப்போது திமுகவின் வாக்குவங்கி பலவீனமாகும்.

அடுத்ததாக நடிகர் மன்சூர் அலிகானும் இங்கு சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். அவர் திடீரென கட்சியைத் துவக்கி, அதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இங்கு வந்து போட்டியிடுவதற்கும் வேலுமணிதான் ஏற்பாடு செய்வதாக எங்களுடைய கட்சிக்காரர்களே பெருமையாகப் பேசுகிறார்கள். இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரித்து, திமுகவுக்கு அந்த வாக்குகள் போகாமல் தடுப்பதற்கான இந்த முயற்சிகள் எவ்வளவு பலனளிக்கும் என்பதை எங்களால் இப்போதைக்குக் கணிக்க முடியவில்லை.’’ என்று அமைச்சர் வேலுமணியின் அரசியல் அதகளங்களை விரிவாக விளக்கினார் அந்த சீனியர் நிர்வாகி.

இஸ்லாமிய வேட்பாளர்கள் இரண்டு பேர் நிற்பதால் திமுகவுக்குப் போகும் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று கோவையிலுள்ள ஜமாத் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்…

‘‘எங்களுடைய நீண்ட காலக் கோரிக்கையான கபர்ஸ்தான் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை தன் சொந்தப்பணம் ஆறரை கோடி ரூபாய் செலவழித்து அமைச்சர் வேலுமணி நிறைவேற்றித் தந்திருக்கிறார். தனிப்பட்ட முறையிலும் பல குடும்பங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார் என்பதெல்லாம் உண்மைதான். அது மட்டுமில்லை; முதல்வரை நேரில் அழைத்து வந்து, அனைத்து ஜமாத் நிர்வாகிகளையும் ஒரே இடத்தில் கூட்டி, அவர்கள் மத்தியில் பேச வைத்தார். அவரும் எங்கள் ஆதரவை கேட்டுப் போயிருக்கிறார். தொகுதியின் எம்எல்ஏவாக, அமைச்சராக வேலுமணி சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். நிறைய உதவிகளையும் செய்திருக்கிறார். ஆனால் அவரால் இஸ்லாமிய மக்களின் அடிப்படை உணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலவில்லை என்பதே ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

குடியுரிமைச் சட்டம் என்பது இஸ்லாமியர் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு பாசிச சட்டம். அதை அதிமுக எதிர்த்திருந்தால் இன்றைக்கு அந்த சட்டமசோதாவே நிறைவேறியிருக்க வாய்ப்பேயில்லை. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதிமுக அதை ஆதரித்து வாக்களித்தது. அதனால் தான் அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. அதை எங்கள் மக்களால் இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ளவோ மறக்கவோ முடியவில்லை. அமைச்சர் செய்த உதவிகளுக்காக அவருக்கு நாங்கள் வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதாவின் சட்டங்களையும் திட்டங்களையும் ஏற்றுக்கொண்ட அதிமுக அரசின் அனைத்து முடிவுகளையும் ஆதரிப்பதாக ஆகிவிடும்’’ என்று இஸ்லாமியர்களின் மன ஓட்டத்தை பிரதிபலித்தார்.

**-பாலசிங்கம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share