ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு சமம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பரவல் அதிகரிக்க அதிகரிக்க, மருத்துவ உள்கட்டமைப்பில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், நோய் தொற்றினால் உயிரிழப்பவர்களை விட மருந்து, படுக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றால்தான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், லக்னோ, மீரட் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அதன் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை நீதிபதிகள் அஜித்குமார் மற்றும் சித்தார்த் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ”மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்காமல் இருப்பது ஒரு குற்ற செயலாகும். ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றம் இழைத்துள்ளார்கள்” என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
”அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்த இந்த நாட்களில், இதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை போன்றவை உடனடியாக நடந்து வருகையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் மக்களை எப்படி இறக்க அனுமதிக்க முடியும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆக்சிஜன் விநியோகிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் மற்றும் அரசு நிர்வாகமும் இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், லக்னோ, மீரட் மாவட்ட ஆட்சியர்கள் 48 மணி நேரத்திற்குள் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
**வினிதா**
.�,