ராஜன் குறை
அரசியல் கருத்துகளுக்காக, வன்முறையற்ற எதிர்ப்புக்காக சிறையில் இருப்பவர்களை மனசாட்சியின் கைதிகள் Prisoners of Conscience என்று குறிப்பிடுவது வழக்கம். ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன் நெருக்கடி நிலையில் சிறைப்பட்டிருந்தவர்களைக் குறித்த ஆவணப் படமொன்றை 1978ஆம் ஆண்டு இந்தப் பெயரில் எடுத்திருந்தார். சமீபத்தில் இந்திய வரலாற்றில் மருத்துவர் பினாயக் சென், அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டது முக்கிய நிகழ்ச்சி.
சுரங்கத் தொழிலாளர்களிடையே தன்னலமற்று மருத்துவப் பணியாற்றி வந்த அவரை, மனித உரிமை ஆர்வலராக இருந்த அவரை UAPA என்ற கடுமையான பொடா போன்ற சட்டத்தின்கீழ் கைது செய்தனர். அவரை விடுதலை செய்ய முற்போக்காளர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எல்லோரும் தொடர்ந்து குரல் கொடுத்ததும், போராடியதும் இறுதியில் அவரை உச்ச நீதிமன்றம் விடுவிக்க உறுதுணையாக இருந்தது எனலாம். மாவோயிஸ அமைப்புகளுக்கு அனுதாபியாக இருப்பது தேசத் துரோக குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அதைவிட அதிர்ச்சியூட்டும்விதமாக 2018ஆம் ஆண்டு பீமா கோரேகான் வழக்கு எனப்படும் வழக்கில் 11 மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்து எந்த குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யாமல் Unlawful Activities (Prevention) Act என்ற சட்டத்தின் கீழ் விசாரணைக் கைதிகளாக வைத்துள்ளது மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகாண்மை (National Investigating Agency NIA). 80 வயதாகும் தெலுங்கு கவிஞர் வராவர ராவ் சிறையில் உடல் நலிவுற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் பிணையில் விடுவிக்க மறுக்கிறது மத்திய அரசு.
**பீமா கோரேகான் என்பது என்ன?**
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஓர் இடம் பீமா கோரேகான். இந்த இடத்தில் 1818ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிரிட்டிஷ் படை ஒன்று, மகர்கள் எனப்படும் தலித் மக்கள் அடங்கிய பிரிவுடன் மராத்திய பேஷ்வாவின் படையை எதிர்த்து போரிட்டு வென்றது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அங்கே அந்த வெற்றியைக் குறிக்கும் நினைவுத்தூண் ஒன்று நடப்பட்டது. பின்னாளில் பேஷ்வாக்களின் பார்ப்பன ஆதிக்கத்துக்கு, சாதி ஆதிக்கத்துக்கு எதிரான தலித் எழுச்சியாக அந்த நிகழ்ச்சி பார்க்கப்பட்டது. 1928ஆம் ஆண்டு அந்த வெற்றியின் நினைவு தினத்தை பாபாசாகேப் அம்பேத்கர் கொண்டாடினார். அது முதல் தலித் மக்கள் ஜனவரி 1ஆம் தேதி பெருமளவில் பீமா கொரேகானில் கூடுவது நிகழ்ந்து வருகிறது.
2018ஆம் ஆண்டு பீமா கோரேகான் 200 ஆண்டு நிறைவினை ஒட்டி, பல்வேறு தலித் அமைப்புகள் இணைந்து புனாவில் பேஷ்வாக்களின் கோட்டைக்கு எதிரில் “எல்கார் பரிஷத்” (பிரகடனக் கூடல்) என்ற பெயரில் திரண்டன. ஜிக்னேஷ் மேவானி, ரோஹித் வெமூலாவின் தாயார், ஜேஎன்யூ மாணவர் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட பலர் அங்கு பேசினர். பல கலை நிகழ்ச்சிகளும் நிகழ்ந்தன. மறுநாள் பீமா கோரேகானில் கூடியவர்கள்மீது இந்துத்துவ அமைப்புகள் தாக்குதல் தொடுத்தன. இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலை கண்டித்து அம்பேத்கரின் பேரனும், அரசியல் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் மகாராஷ்டிரா தழுவிய பந்த்தை அறிவித்தார்.
இந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சிதான் கலவரத்துக்கு காரணம் எனவும், மாவோயிஸ்டுகள் ஊடுருவியதால்தான் இது நிகழ்ந்தது என்றும் கூறி 11 பேரை கைது செய்ய முனைந்தது பாஜக அரசு. சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவத், சோமா சென், அருண் ஃபிரைரா, வெர்னான் கொன்செல்வாஸ், சுதா பரத்வாஜ், வராவர ராவ் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஆனந்த் டெல்டும்டே, கெளதம் நவலகா ஆகிய இருவரும் தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று பிணை கேட்டு வழக்காடியும் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, அம்பேத்கர் பிறந்த தினத்தில் சரணடையுமாறு ஆணையிடப்பட்டனர். இவர்கள் அனைவருமே சமூகத்தில் வெளிப்படையாகச் செயல்பட்டு வருபவர்கள்தான். இவர்கள் யாருக்கு எதிராகவும் எந்த ஒரு குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், பீமா கொரேகான் வன்முறைக்குத் தூண்டியவர்கள் என்றும் பிரதமர் மோடியைக் கொல்ல ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் கூறி இவர்கள் பிணையில் வெளிவர முடியாத UAPA சட்டத்தில் சிறையில் அடைத்திருக்கிறது அரசு.
**வராவர ராவ்**
தெலுங்கு கவிஞரும், இலக்கியவாதியுமான வராவர ராவ் நாடறிந்த பேச்சாளர், எழுத்தாளர். 80 வயதாகும் இவர், 40 ஆண்டுக் காலம் கல்லூரி ஆசிரியராக இருந்தவர். இவரது அரசியல் நடவடிக்கைகளும் நாடறிந்தவை. இவர்மீது குறிப்பாக எந்த குற்றமும் இல்லை. ஆனால், பீமா கோரேகான் வன்முறையுடன் தொடர்புப்படுத்தப்பட்டு, மாவோயிஸ ஆதரவாளர் என்று குற்றம் சாட்டப்பட்டு எந்த விசாரணையும் இல்லாமல் 22 மாதங்களாகச் சிறையில் உள்ளார். இவரை பிணையில் விடுவிப்பதால் இந்திய அரசுக்கு எந்த ஆபத்தும் வருவதற்கு வாய்ப்பில்லை. இவர் உடல் நலிவடைந்து உள்ளார் என குடும்பத்தினர் கூறுகின்றனர். இவரை பிணையில் விடுவிக்கச் சொல்லி அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எந்த வழக்கும், ஆதாரங்களும் இல்லாமல் ஆள்தூக்கிச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணையே இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் அரசின் செயல்பாட்டுக்கு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளார். சிறையில் கொரோனா பரவி வரும் நிலையில், இப்படி அரசியல் கைதிகளை விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பது அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
**ஆனந்த் டெல்டும்டே**
ஆனந்த் டெல்டும்டே புகழ்பெற்ற அம்பேத்கரிய சிந்தனையாளர். தலித் பிரச்சினைகள் குறித்த பல ஆங்கில நூல்களை எழுதியுள்ளார். அம்பேத்கரின் பேத்தியை மணந்தவர். தலித் அரசியலுடன், பெருமுதலீட்டிய நவதாராளவாத சார்பையும் கடுமையாக விமர்சிப்பவர். கோவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மானேஜ்மண்ட்டில் பேராசிரியராக உள்ளார். இவர் மீது குற்றம் சுமத்துவதற்கான எந்த ஆதாரத்தையும் அரசு காண்பிக்கவில்லை. உலகெங்கும் சிந்தனையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இவர் சிறைபடுத்தப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்து வருகிறார்கள். கொரோனா காலத்தில் தேவையில்லாமல் அரசியல் கைதிகளை சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்து வருகிறார்கள்.
டெல்டும்டே விஷயத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் இவர் பீமா கொரேகான் கொண்டாட்டங்களை விமர்சிப்பவர். 1818ஆம் நிகழ்ந்த போரை மகர்களின் வெற்றியாகக் கொண்டாடுவது மிகையானது என்றும் வரலாற்றை யதார்த்தமாக அணுகாத போக்கென்றும் கருதுபவர். ஆனால், அரசு இவரையும் சிறையில் அடைத்துள்ளது. 69 வயதாகும் டெல்டும்டே முதுகுவலியினால் அவதிப்படுபவர்.
**அரசு ஏன் இவர்களைச் சிறையில் வைத்துள்ளது? **
பொதுக்களத்தில் வெளிப்படையாகச் செயல்படும் சிந்தனையாளர்கள், நடவடிக்கையாளர்களான இவர்களை அரசு ஏன் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைத்துள்ளது? இவர்களால் அரசுக்கோ, நாட்டுக்கோ ஏதேனும் தீங்கு நிகழக்கூடும் என்று சொல்ல முடியுமா? ரொமிலா தாப்பர் உள்ளிட்ட கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் எவ்வளவு வலியுறுத்தினாலும் கவலைப்படாமல் அரசு பிடிவாதமாக இவர்களைச் சிறையில் வைத்திருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று யோசித்தால், குடிமைச் சமூகத்தை அச்சுறுத்துவதுதான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலையை எந்த நெருக்கடி நிலையையும் அறிவிக்காமலேயே பாஜக அரசு பகிரங்கமாகச் செய்துகாட்டி வருகிறது. இது மக்களாட்சியை பொருளற்று போகச்செய்கிறது என்றால் மிகையாகாது. ஒரு முதிர்ச்சியடைந்த குடியரசுக்கு மாபெரும் தலைகுனிவு இது. இந்த 11 பேரையும் விடுவிக்கச் சொல்லி வலிமையான குடிமைச் சமூக இயக்கம் தோன்ற வேண்டும். முதியவர் வராவர ராவ் சிறையில் மரணமடையும்படி விடுவது மாபெரும் துயரம்.
**கட்டுரையாளர் குறிப்பு**
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
�,”