வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட தமிழக அரசின் முடிவை கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்த நிலையில், இந்த விவகாரம் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பாமக, வன்னியர் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீடு வழக்குகள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக பாமக தனது வழக்கறிஞர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது.
10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படியே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தீவிரத்தைக் காட்டும் வகையில் தமிழ்நாடு பிசி, எம்பிசி ஆணையம், தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் ஆகியோர் சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 10.5% இட ஒதுக்கீடு படி உயர் கல்வித் துறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக உயர் கல்வித் துறையும் தனியாக ஒரு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆக தமிழ்நாடு அரசு சார்பில் மட்டும் 4 மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோரை மனு தாரர்களாக்கி பாமக சார்பில் 3 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அமைப்புகளில் வேட்டுவ கவுண்டர்கள் சங்கத்தின் அரசியல் வடிவமான புதிய திராவிடர் கழகம் சார்பில் இந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டால் தங்களையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பின்னணியில் பாமகவின் முக்கிய வழக்கறிஞரான கே.பாலு இன்று (நவம்பர் 18) டெல்லிக்கு பயணமாகியுள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், “வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வர உள்ள நிலையில் அதற்குண்டான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள இன்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் 4 மேல்முறையீட்டு மனுக்களும், பாமக சார்பில் 3 மேல்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இதில் மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்வதற்காகவும், இடைக்கால உத்தரவு பெறுவதற்கான காரணங்களை அவர்களோடு கலந்து விவாதிப்பதற்காகவும், மருத்துவர் ராமதாஸ் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தற்போது டெல்லிக்கு விரைந்து கொண்டிருக்கிறேன். நிச்சயமாக வெற்றி செய்தியுடன் திரும்புவேன் என்று நம்புகிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக் கிழமை என்ற நிலையில் அனேகமாக அடுத்த வாரத்தில் இந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. அதனால்தான் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக் காலத் தடை பெறும் சட்டப் போராட்டத்தில்
தமிழக அரசும், பாமகவும் ஈடுபட்டுள்ளன.
**-வேந்தன்**
�,