வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் உள்ள சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்காக அவர்களை அடையாளம் காணும் நோக்குடன், அவர்கள் குறித்த கணக்கெடுப்பை அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில அரசுகளின் மூலமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் வன்னியர்கள், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு தனித்தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதனை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு. வழக்கறிஞர் ந.வினோபா பூபதி ஆகியோர் அடங்கிய குழு முதல்வரை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (அக்டோபர் 12) நேரில் சந்தித்து வழங்கியது.

அந்த கடிதத்தில், “வெறும் சாதிப் பெயரின் அடிப்படையில் சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், குறிப்பிட்ட பெயர்களிலான சாதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சீர்மரபினராகச் சேர்க்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது” என்ற ராமதாஸ்,

“அவ்வாறு சேர்க்கப்பட்டால், உண்மையான சீர்மரபினருக்குக் கிடைக்க வேண்டிய பயன்கள், அவர்கள் சார்ந்த சாதியின் பெயரைத் தாங்கிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் கிடைக்கும். அது பிற சாதிகளைச் சேர்ந்த மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கு எதிராகப் போராடத் தொடங்கினால், அது மிகப்பெரிய சட்டம் – ஒழுங்கு சிக்கலாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்துவதால் பொதுவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், குறிப்பாக வன்னியர்களும் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்ட ராமதாஸ், “சீர்மரபினருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை சாதியின் பெயரில் உள்ள ஒற்றுமையைப் பயன்படுத்திக்கொண்டு பிறர் கொள்ளையடிப்பதை மட்டும் தான் பாமக எதிர்க்கிறது. இந்தச் சிக்கலுக்கு எந்த சமுதாயமும் பாதிக்கப்படாமல், அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய உரிமைகள் வழங்கப்படுவதற்கும், சீர்மரபினருக்குக் கூடுதல் உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படுவதற்கும் சில எளிய தீர்வுகளை பாமக முன்வைக்கிறது” என்று கூறியுள்ளார்.

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே சீர்மரபினரைக் கணக்கெடுக்க முடியும். அவ்வாறு செய்யும்போது அனைத்து சாதியினரையும் கணக்கெடுப்பது எளிதானது. அதற்கான எந்த கூடுதல் செலவும் ஆகாது. சீர்மரபினர் கணக்கெடுப்புக்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது என்பதால், தமிழ்நாட்டில் மத்திய அரசின் செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட முடியும்.

2. சீர்மரபினர் என்ற பிரிவு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும் வரை சீர்மரபினர் என்ற பெயரில் சான்றிதழ் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வளர்ந்த சமூகங்கள் பறித்துக் கொள்ளும் கொடுமை தொடரும். இச்சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் சீர்மரபினரைத் தனிப்பிரிவாக அறிவித்து, அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கலாம்.

3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள மற்ற சாதிகளுக்கு அவர்களின் மக்கள்தொகைப்படி தனித்தொகுப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும். எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல், வன்னியருக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குதல், சீர்மரபினருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமுதாயங்களுக்கு தனித்தனி தொகுப்பு இட ஒதுக்கீட்டை வழங்குதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் ராமதாஸ்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share