தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (டிசம்பர் 12) பகலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்துப் பேசினார்.
தமிழகம் காஷ்மீராகிறது என்று முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணமடைந்த ஹெலிகாப்டர் விபத்தை ஒட்டி மாரிதாஸ் கருத்து வெளியிடிருந்தார். மேலும் தமிழகத்தில் பிரிவினை வாத சக்திகள் வலுப்பெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். அவரது ட்விட்டர் பதிவு இந்திய விமானப் படை, ஒன்றிய அரசின் கருத்துகளுக்கு எதிராக இருப்பதாக கூறி போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டிசம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாரிதாஸ் நேற்று (டிசம்பர் 11) நியூஸ் 18 சேனல் அளித்த புகாரின்படி தொடுக்கப்பட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு எதிராகவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிராகவும் கடுமையாக கொந்தளித்தார். இது தொடர்பாக இன்று ஆளுநரையும் சந்தித்தார்.
ஆளுநரை அண்ணாமலை சந்தித்தபோது அவருடன் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். பாஜகவைச் சேர்ந்தவர்கள், பாஜக ஆதரவாளர்கள் மொத்தம் 21 பேர் மீது சமூக தளப் பதிவுகளுக்காக வழக்குப் பதிவு செய்யபப்ட்டிருப்பதை ஆளுநரிடம் சுட்டிக் காட்டிய அண்ணாமலை… அதேநேரம் திமுக, திக போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் 300க்கும் மேற்பட்ட சட்ட விரோத பதிவுகளை பிரின்ட் அவுட் எடுத்து அவற்றைத் தொகுத்து இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநரும் இது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாக அண்ணாமலையிடம் உறுதியளித்திருக்கிறார்.
இந்த சந்திப்பு முடிந்து அண்ணாமலை தவிர மற்ற பாஜக நிர்வாகிகள் அந்த அறையில் இருந்து வெளியே சென்றுவிட்டனர். அதன் பின் சுமார் அரைமணி நேரம் ஆளுநரும் அண்ணாமலையும் மட்டும் தமிழ்நாட்டு அரசியல் தொடர்பாக தனிப்பட்ட முறையில் விவாதித்திருக்கிறார்கள் அந்த தனிப்பட்ட சந்திப்பில்தான் மனுவில் கொடுத்தவற்றை விட முக்கியமான விஷயங்கள் பேசபட்டிருக்கலாம்” என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.
**-வேந்தன்**
�,