வாக்காளர் பட்டியல் எங்கே? அதிமுக தேர்தலுக்கு தடை கோரி வழக்கு!

Published On:

| By Balaji

அதிமுகவில் அமைப்புத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் எம்பியான கே.சி. பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக, ‘ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது. ஒரு வாக்கில் இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்”என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அடுத்த நாளே… அதிமுகவின் அமைப்புத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதுவும் குறிப்பாக டிசம்பர் 7 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் நடத்தப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3, 4 தேதிகளில் இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்று அதற்கான பணிகளையும் ஆணையர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 3) அதிமுகவின் தொடக்க கால உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிசாமி இந்தத் தேர்தல் அறிவிப்பே சட்ட விரோதமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்.

அவர் அதிமுக, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

அதில். “அதிமுகவின் தேர்தலுக்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது. பொதுச் செயலாளர் ஜெ யலலிதாவின் எதிர்பாராத மரணத்துக்குப் பின் கட்சியில் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற சூழலில் இருவரும் தங்களைத் தாங்களே இந்தப் பதவிக்கு அறிவித்துக்கொண்டார்கள். அதிமுகவின் சட்ட விதிகள் 20 (2) இன்படி கட்சியை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர்தான் நிர்வகிக்க வேண்டும். எனவே இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

மேலும் தேர்தல் நடத்துவதற்கு 21 நாட்கள் முன்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் டிசம்பர் 2 ஆம்தேதி அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்பது அதிமுகவின் சட்டத்துக்கு எதிரானது.

மேலும் அதிமுகவில் பல அடிப்படை உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியை ஒட்டி வாக்காளர் பட்டியலே இன்னும் தயாரிக்கப்படவில்லை. இப்படி பல்வேறு காரணங்களால் இந்த தேர்தல் அறிவிப்பே அதிமுக கட்சியின் சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்.

எனவே முறையாக 21 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டு, முறையான அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் பிறகே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதும் ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராகக் கொண்டே தேர்தல் நடத்தப்பட வேண்டும்”என்று தனது மனுவில் கூறியிருக்கிறார் கே.சி.பழனிசாமி.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share