~என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு நன்றி!

Published On:

| By Balaji

கணவரை இழந்த நிலையில், தங்களுக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்த மத்திய, மாநில அரசுகள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர் விவேக் குடும்பத்தினர்.

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் நேற்று(ஏப்ரல் 17) அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. நேற்று மாலை, அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று(ஏப்ரல் 18) சென்னை விருகம்பாக்கத்தில் விவேக் இல்லத்தில் அவரது மனைவி அருள்செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் மூத்தமகள் அமிர்தா நந்தினி, இளையமகள் தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

விவேக் மனைவி அருள்செல்வி பேசியபோது, ” என் கணவரை இழந்திருக்கும் இந்த நேரத்தில் எங்களது குடும்பத்துக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றைக்கும் நாங்கள் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம். நீங்கள் கொடுத்த மரியாதை என் கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி, கடைசி வரைக்கும் நீங்கள் கூட இருந்தீர்கள். ரொம்ப நன்றி.

ஊடகத்தினருக்கும்,அவருடைய இறுதிபயணம் வரை கூட வந்த கோடான கோடி ரசிகர்களுக்கும், தொலைத்தூரத்தில் இருந்து வந்து இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி” என்று கூறினார்.

நடிகர் விவேக் மறைவிற்கு இன்றும் பல இடங்களில் மரங்களை நட்டு மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், வனத்துறையினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share