கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று (ஏப்ரல் 21) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், “மாநில அரசுகள் நேரடியாகவே கொரோனா தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் ஏற்கனவே நிதிச்சுமையில் இருக்கும் மாநில அரசுகளுக்கு இது மேலும் நெருக்கடியை உண்டு பண்ணும். அதனால், மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும்.
எப்படி இருப்பினும், கேரள அரசு தனது வாக்குறுதிகளைத் திரும்பப் பெறாது. ஒவ்வொரு முறையும் வார்த்தைகளை மாற்றிப் பேசும் வழக்கம் எங்களுக்கு இல்லை. மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம்.
மாநிலத்தின் கொரோனா பாதிப்பு நிலை குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும். மேலும்,கொரோனா மேலாண்மை குறித்து விவாதிக்க மற்றும் பரிந்துரைகளை எடுக்க தனியார் மருத்துவமனைகளுடன் ஒரு ஆலோசனை கூட்டமும் நடத்தப்படும்.
கேரளாவில் தற்போதைக்கு முழு ஊடரங்கிற்கு வாய்ப்பில்லை. ஆனால், கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற மக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருக்கிறதோ அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,414 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இன்று ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்தார்.
சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், கேரள முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
**வினிதா**
.�,