தடுப்பூசி செலுத்திக்கொள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வம்!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் இன்று 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி போடும்பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறார்கள் 15 வயதுக்கு மேற்பட்டு 18 வயதுக்கு உட்பட்டு இருப்பதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இவர்கள் அனைவருக்கும் இன்று முதல் தொடங்கி தடுப்பூசி போடப்படவுள்ளது.

பள்ளிகளிலேயே தடுப்பூசி போடத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்தப்படுவதையொட்டி மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டிருந்தனர். முதல்வர் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்ததும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “முந்தைய வைரசை விட ஒமிக்ரான் வைரஸின் பரவல் வேகம் அதிகம், அதனால் தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கக் கூடும். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாமல் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சென்னையில் சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் இப்பணி தொடங்கியது. மதுரையில் சுமார் 1.41 லட்சம் சிறார்கள், தஞ்சையில் 1.15 லட்சம் சிறார்களுக்கு என தமிழக முழுவதும் 33 லட்சத்து 46 பேருக்குத் தடுப்பூசி போடப்படவுள்ளது. ஜனவரி இறுதிக்குள் இவர்களுக்குத் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவேண்டும், அதுபோன்று பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடன் பெற்றோர்களும் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று காத்திருக்கின்றனர்.

சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படுவது குறித்து சேலம், தலைவாசல் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசினோம். “மாணவர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவித்ததுமே, அவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். நாங்கள் எல்லாம் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டோம். தடுப்பூசி போடுவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதனால் தயங்காமல் போட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு நீங்கள் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களும் இன்னும் போடாமல் இருந்தால் உடனடியாக போடச் சொல்லுங்கள் என்று மாணவர்களிடத்தில் அறிவுறுத்தினோம். தற்போது மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்” என்றார்.

வாழப்பாடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில், “தடுப்பூசி போட பெற்றோர்களின் சம்மதம் கேட்டார்கள். எங்களுக்குச் சம்மதம் தெரிவிக்கத் தயக்கமாகத் தான் இருந்தது. ஆனால் என் மகள் நான் போட்டுக்கொள்கிறேன் என்று ஆர்வமாக எங்களையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றுவிட்டார். தற்போது செவிலியர்கள் மருத்துவர்களின் வருகைக்காகப் பெற்றோர்களும், மாணவர்களும் பள்ளியில் காத்திருக்கிறோம்” என்றனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share