பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவிடம் இன்று (ஜனவரி 27) விடுதலை ஆவணங்கள் ஒப்படைக்கப்படுகின்றன.
சசிகலா விடுதலையின் மூலம் பிரிந்து கிடக்கும் மன்னார்குடி வகையறாக்களின் குடும்பங்கள் ஒன்று சேரும் என்ற நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் முதல் வெளிச்ச அறிகுறியாக ஒரு சுப நிகழ்ச்சி ஜனவரி 25 ஆம் தேதி நடந்துள்ளது.
சசிகலாவின் சொந்த சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமணம் கடந்த 2020 மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தத் திருமணத்துக்கு பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா வரவில்லை. தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக திவாகரன் இருந்ததால் டிடிவி தினகரனும் அந்தத் திருமணத்திற்கு வரவில்லை. இத்தனைக்கும் மணமகள் சுபஸ்ரீ, தினகரனின் தம்பி பாஸ்கரனின் மகள் என்றபோதும் தினகரன் அந்தத் திருமணத்துக்குச் செல்லவில்லை. திவாகரனை மிக நெருங்கிய உறவு கொண்டாடும் விவேக் கூட ஜெய் ஆனந்த் திருமணத்திற்கு வரவில்லை. அப்போது சசிகலா குடும்பத்தில் ஒற்றுமை இல்லை என்ற தகவல் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முடிவுகட்டும் வகையில்… திருமணத்தில் சேர்க்க முடியாத குடும்பத்தை… திவாகரன் தாத்தா ஆகப்போகும் சீமந்த வைபவம் ஒன்று சேர்த்திருக்கிறது.
கடந்த 25ஆம் தேதி ஜெய் ஆனந்தின் மனைவி ஜெயஸ்ரீக்கு சீமந்தம் (வளைகாப்பு) அவரது தந்தையான சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரனின் நீலாங்கரை வீட்டில் நடந்தது. திருமணத்திற்கு செல்லாத தினகரன் தனது மனைவியுடன் நீலாங்கரையில் பாஸ்கர் வீட்டுக்கு சென்று ஜெய் ஆனந்த்தையும் அவரது மனைவியையும் ஆசீர்வதித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தினகரன் கலந்து கொண்டதன் மூலம் திவாகரனுக்கும் தினகரனுக்குமான நீண்டநாள் பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக குடும்பத்தினர் சிலர் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.
இடையில் சில காலம் திவாகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு நெருக்கம் காட்டி வந்தார். . முதல்வர் எடப்பாடியின் தாயார் காலமானபோது தனது மகன் ஜெய் ஆனந்தை அனுப்பி முதல்வரிடம் துக்கம் விசாரிக்க வைத்தார் திவாகரன். ஆனால் சமீபத்தில் நடந்த தினகரனின் மகள் நிச்சயதார்த்தம் உட்பட அவர் வீட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. இதனால் தினகரனுக்கும் திவாகரனுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் சசிகலா வெளியே வருவதை அடிப்படையாக வைத்து தற்போது ஜெய் ஆனந்த் மனைவி சீமந்த விழாவில் தினகரன் தன் மனைவியோடு கலந்துகொண்டு திவாகரனை சந்தித்திருக்கிறார்.
தன்னுடைய மனைவி சீமந்த விழாவில் தினகரன் கலந்து கொண்டதை புகைப்படத்தோடு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜெய் ஆனந்த் இந்த ஒற்றுமை நீடிக்க வேண்டுமென்று ஜெய் ஆனந்தின் ஃபேஸ்புக்கில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
“சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை என்று டெல்லியில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அவரது இந்த கருத்து மன்னார்குடி குடும்பத்தில் வேறுபாடுகளால் பிரிந்து கிடந்த பலரையும் கோபமாக்கியிருக்கிறது. ‘நம்மை ஆரம்பத்தில் எதிர்த்த ஓபிஎஸ் கூட அமைதி காக்கிறார். ஆனால் சின்னம்மாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி ரொம்பவே சவுண்டு விடுகிறார். இனியும் நாம் பிரிந்திருக்கக் கூடாது’ என்ற முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு சசிகலாவின் விடுதலையும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. சசிகலா வெளியே வந்தவுடன் குடும்பத்தினர் அனைவரையும் கூட்டிப் பேச இருக்கிறார். எனவே இந்த ஒற்றுமைக்கு எடப்பாடியும் ஒரு காரணம்” என்கிறார்கள் தினகரன் தரப்பினர்.
ஆனால், “சசிகலா விடுதலைக்குப் பின் அரசியலுக்கு வரக் கூடாது என்று எடப்பாடி தரப்பு திவாகரனுக்கு நிபந்தனைகள் விதித்ததாகவும்,அதை திவாகரன் தரப்பு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் குடும்பத்திலேயே பேச்சு இருக்கிறது. இந்நிலையில் ஜெய் ஆனந்த் மனைவியின் சீமந்த வளைகாப்பு நிகழ்வுக்கு தினகரன் குடும்பத்தோடு சென்றது நல்ல அறிகுறிதான். அதேநேரம் இதனாலேயே குடும்பம் ஒற்றுமை ஆகிவிட்டதா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்”என்கிறார்கள் மன்னார்குடி குடும்பத்தில் மேலும் சிலர்.
.
**-வேந்தன்**�,