Aபுதிய அதிபரானார் பிடென்

Published On:

| By Balaji

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பிடென் இந்திய நேரப்படி ஜனவரி 20ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு பதவியேற்றிருக்கிறார்.

அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவியேற்பு உறுதிமொழியை வாசிக்க, கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் மீது கை வைத்து உறுதிமொழியை வாசித்து அமெரிக்க அதிபராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார் ஜோ பிடென்.

அவரோடு துணை அதிபராக இந்திய ஜமைக்கா வம்சாவழியினரான கமலா ஹாரிஸும் பதவியேற்றுக் கொண்டார்.

அதிபரானதும் பேசிய பிடென், “ஒரு கலகக்கார கும்பல் மக்களின் விருப்பத்தை நசுக்கிவிட முடியும் என்று நினைத்த சில நாட்களுக்குப் பிறகு நாம் இங்கே நிற்கிறோம். அது நடக்காது, இன்று இல்லை, நாளை இல்லை, எப்போதும் நடக்காது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “நாம் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் நமக்கு முன்னாள் ஏராளமாக இருக்கின்ற நிலையில், நேரத்தை வீணாக்கப் போவதில்லை. அமெரிக்க மக்களுக்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகள், உடனடியாக நிவாரணங்களை அதிபர் என்ற முறையில் மேற்கொண்டு அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன்.

அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்கும்” என்று கூறியுள்ளார் அதிபர் ஜோ பிடென்.

முன்னதாக புதிய அதிபர் பதவியேற்பதற்கு சில மணி நேரம் முன்புவரை வெள்ளை மாளிகையிலேயே இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளாமல் ஃப்ளோரிடாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது இறுதிக் கருத்துகளில், டிரம்ப், “நான் அமெரிக்க மக்களை நேசிக்கிறேன். இதுவரை எனக்குக் கிடைத்தது மிகச் சிறந்த கௌரவம். நான் விடைபெற விரும்புகிறேன், ஆனால், அது நீண்ட காலத்துக்கு அல்ல. நாம் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

புதிய அமெரிக்க அதிபர் ஜோ பிடெனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் புதிய அமெரிக்க அதிபருக்குத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share