தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்று முடிந்தது. அதில் திமுக கிட்டத்தட்ட முழு வெற்றியைப் பெற்றுள்ளது.
அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்னும் நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய அவசரத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இருக்கிறது. இந்த நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் பணிகள் தொடங்கி விட்டதாக நகர நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நேற்று அக்டோபர் 17ஆம் தேதி திருச்சியில் ரூ.4.5 கோடியில் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே, அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படியே மாநகராட்சி, நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் கலந்துபேசி, அவர்கள் சொல்லக்கூடிய தேதியில் தேர்தல் நடைபெறும்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இடங்களில், அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்தனர். ஆனால், திமுக ஆட்சியில் தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டுள்ளனர். சில இடங்களில் ஒரு வாக்கு, நான்கு வாக்குகள் வித்தியாசத்தில்கூட திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டதால்தான், இவ்வாறு நடந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் போலல்லாது மாநில தேர்தல் ஆணையம் தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர் நேரு.
**வேந்தன்**
.�,”