தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கொரோனா ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பால் தள்ளி வைக்க வேண்டும் என்ற வழக்கு இன்று (ஜனவரி 21) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனரும் மருத்துவருமான நக்கீரன் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் தேதி தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று (ஜனவரி 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பை கருதி தேர்தலை சில மாதங்கள் தள்ளிவைக்கலாம்” என்று கூறப்பட்டது.
இதைக் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மாநில தலைமை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம், “ஜனவரி 27 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதே?” என்று கேட்டனர்.
அதற்கு மாநில தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த டிசம்பர் மாதமே உள்ளாட்சித் தேர்தலை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்” என்று கூறினார்.
அப்போது மனுதாரர் டாக்டர் நக்கீரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரத்தின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று 2021 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு பதிலையும் கேட்ட உயர் நீதிமன்றம், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேலும் ஏதேனும் வழக்குகள் வந்தால் அவற்றையும் சேர்த்து 24 ஆம் தேதி விசாரிக்கப்படும்” என்று வழக்கை ஒத்தி வைத்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்போ, வழிகாட்டுதலோ கிடைக்க இன்னும் இரு நாட்கள் இருப்பதால், அதற்குள் மாநில தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கையை வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்குள் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டால் நீதிமன்றத்தின் கண்டனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சஸ்பென்ஸ் திங்கள் வரை தொடரலாம். ஆனாலும் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
**-வேந்தன்**
[உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? இன்று தெரியும்!](https://minnambalam.com/politics/2022/01/21/14/urban-localbody-elections-postpone-case-high-court)
�,