கடந்த 48 மணி நேரத்தில் இந்திய அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான 3 ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கு உட்பட பல்வேறு முக்கிய நபர்களின் அல்லது முக்கிய அரசு நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த சூழலில் நேற்றைய தினம் உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 12 : 30 மணியளவில் ஹேக் செய்யப்பட்டது. அந்தக் கணக்கில்இருந்த யோகி ஆதித்யநாத் முகப்பு படம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கார்ட்டூன் குரங்கு முகமாக வைக்கப்பட்டிருந்தது. அதோடு நூற்றுக்கணக்கான சம்பந்தமில்லாத ட்வீட்டுகள் அந்த கணக்கில் இருந்து போடப்பட்டிருந்தன.
40 லட்சம் பேர் பின்பற்றும் இந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜி பிரசாந்த் குமார் கூறுகையில், முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக சைபர் செல்லில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ட்விட்டர் கணக்கு 30 நிமிடங்களில் மீட்கப்பட்டது.
உபி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கை தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது.
2.46 லட்சம் பேர் பின் தொடரும் இந்த ட்விட்டர் கணக்கை மர்மநபர்கள் முடக்கினர். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் மீட்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த சூழலில் பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. 2.96 லட்சம் பேர் பின் தொடரும் இந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு முகப்பு பக்கத்தில் கார்ட்டூன் படங்கள் மாற்றப்பட்டிருந்தன. அதில் சில அர்த்தமற்ற தகவல்களும் பதிவிடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் யுஜிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களில் மூன்றாவது முறையாக முடக்கப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு யுஜிசி ட்விட்டர் கணக்கு ஆகும்.
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மக்களவையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 2017-ல் 175, 2018-ல் 114, 2019-ல் 61, 2020-ல் 77, 2021-ல் 186 கணக்குகளும் இந்த ஆண்டு இதுவரையில் 26 கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**