உள் துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உள் துறை அமைச்சருமான அமித் ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4ஆம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 14ஆம் தேதி தான் கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அமித் ஷா மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மார்புத் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அமித் ஷா நேற்று சிடி ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில், அதன் முடிவில் மார்பில் அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் எய்ம்ஸில் சேர்ந்துள்ளார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலோரியாவின் கண்காணிப்பில் அமித் ஷா சிகிச்சை பெற்று வருகிறார். குறைந்தது 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று (ஆகஸ்ட் 18) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உள் துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 4 நாட்களாக உடல் வலி மற்றும் சோர்வு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை. தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அனுமதிக்கப்படும் (post covid care) வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவர் நலமாக இருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடி வழக்கமான பணிகளை கவனிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**எழில்**
�,”