நாட்டு மக்களிடையே மாஸ்க் அணியும் பழக்கம் குறைந்ததன் காரணமாக இந்தியா தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் தொற்று இந்தியா உட்பட 59 நாடுகளிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினாலும், இதன்மூலம் மூன்றாவது அலை ஏற்படுமோ என்ற அச்சமும் இருக்கிறது. இதனால் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், “நாட்டில் மாஸ்க் பயன்பாடு குறைந்து வருகிறது. முழு தடுப்பூசி மற்றும் மாஸ்க் ஆகிய இரண்டும் முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலகளாவிய சூழ்நிலையில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது அலைக்கு முன்பு மாஸ்க் அணிவது குறைந்தது. அதுவே மே மாதம் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியபோது பயம் காரணமாக மாஸ்க் அணிவோரின் எண்ணிக்கை அதிகமானது. திரும்பவும் ஆகஸ்ட், டிசம்பரில் மாஸ்க் அணிவது குறைந்துள்ளது. ஆபத்தான நிலைக்குள் நுழைந்துவிட்டோம். இந்தியா தற்போது ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து ஒன்றிய சுகாதாரத் துறை இணை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மாவட்ட அளவிலான கட்டுப்பாடுகளை விதித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கேரளம், மிசோரம், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களில் எட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவிகிதமாகவும், ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 19 மாவட்டங்களில் 5 சதவிகிதமாகவும் உள்ளது. தொற்று அதிகரித்தால் உடனடியாக உள்ளூர் கட்டுப்பாடுகளை விதித்து பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு, மக்கள் அதிகளவில் கூடுவதைக் கட்டுப்படுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களைக் குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சோதனை மற்றும் கண்காணிப்புகளை அதிகரிப்பதுடன், அனைத்து இடங்களிலும் கொரோனா விதிமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தமிழ்நாட்டில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இதுவரை மொத்தம் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் டெல்டா வைரஸ் மட்டுமே உள்ளது. இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை.
**-வினிதா**
�,