ஒன்றிய தேசியமும், மொத்தத்துவ தேசியமும்…

politics

ராஜன் குறை

சென்ற வாரம் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு இந்திய தலைநகரில் திராவிட முன்னேற்றக் கழக அலுவலகம் திறக்கப்பட்டதாகும். பல்வேறு பத்திரிகையாளர்களும், அரசியல் நோக்கர்களும் இந்த நிகழ்வை திமுக “தேசிய” அரசியலில் வகிக்கும் பங்கினை குறிக்கும் நிகழ்வாகவே கருதினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது அவர் அருமையான ஒரு மறுமொழியைக் கூறினார். “மாநில அரசியல், தேசிய அரசியல் என்று பிரித்துப் பார்க்க முடியாது. மாநில அரசியல் எல்லாம் ஒன்றிணைவதுதான் தேசிய அரசியல்” என்று கூறினார். இது மிக முக்கியமான ஒரு கருத்தாகும்.
ஒன்றிய அரசிடம் அதிகாரம் குவிந்திருப்பதால் ஒன்றிய அரசின் முடிவுகள் தேசிய அரசியலால் வழி நடத்தப்படுவதாகவும், மாநில அரசிடம் அதிகாரங்கள் குறைவாக பகிரப்பட்டிருப்பதால் மாநில அரசால் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே மாநில அரசியலால் வழி நடத்தப்படுவதாகவும் கருதிக்கொண்டு கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்திய ஊடகங்களும், வரலாற்று ஆசிரியர்களும் தேசிய அரசியல் என்பதே ஒரு மரத்தின் மைய தண்டினை போலவும், மாநில அரசியல் எல்லாம் கிளைகள் போலவும் எழுதி வருகின்றனர். இதை “டிரீ-பிராஞ்ச்” மாடல் என்று கூறுவர். இது ஓர் இயற்கையான உருவகமாக இருக்கும்போது, தேசம் என்பதே ஏதோ இயற்கையில் தானாக உருவாகியது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. இது உண்மைக்கு புறம்பானது. மக்கள் எல்லாம் தங்கள் அரசியல் விழிப்புணர்வின் மூலம் கட்டமைப்பதுதான் தேசியம் என்பதும், தேசம் என்பதும் ஆகும்.
இந்த இருவேறு சிந்தனை போக்குகளை ஆராயும்போது நாம் இரண்டுவிதமான தேசியங்களை, அதாவது தேசத்தைப் புரிந்துகொள்ளும் கருத்தியலை அடையாளம் காணலாம். ஒன்று, ஒன்றிய தேசியம். அது பல்வேறு மக்கள் தொகுதிகள் இணைந்து ஓர் ஒன்றியமாக இந்திய தேசியத்தை உருவாக்கின என்பதை உணரும் ஒன்றிய, வரலாற்றுவாத தேசியம். மற்றொன்று, பண்டைய காலத்திலிருந்தே இந்தியா என்று ஒட்டுமொத்தமாக ஒரு தேசியம் இருந்ததாகவும் அதன் பகுதிகள்தான் எல்லா மக்கள் தொகுதிகள் அல்லது மாநிலங்கள் என்று கருதும் மொத்தத்துவ, சாராம்சவாத தேசியம்.
இந்த வேறுபாட்டை துல்லியமாகப் புரிந்துகொள்ள நாம் மூன்று அம்சங்களை பரிசீலிக்க வேண்டும்.
எல்லா தேசங்களுமே நவீன காலத்தில் உருவானவைதான். பண்டைய தேசம் என்று எதுவும் கிடையாது.
மக்கள் தொகுதிகள் உருவாகி அவை கட்டமைப்பதுதான் தேசியமே தவிர, தேசியத்தால் மக்கள் தொகுதிகளைக் கட்டமைக்க முடியாது.
ஒன்றிய அரசாங்கத்தை வழி நடத்துவது ஆட்சியியல் என்று கூறலாம்; அரசியல் என்பது மாநிலங்களில்தான் நிலைகொண்டுள்ளது.
**எல்லா தேசங்களும் நவீனமானவைதான்**
ஆங்கிலத்தில் கன்ட்ரி (Country) என்பதும், கிங்டம் (Kingdom) என்பதும், Empire (பேரரசு) என்பதும் பழைய மன்னராட்சி கால அரசியல் தொகுப்புகளைக் குறிக்க பயன்படுகின்றன. நேஷன் (Nation) என்பது மன்னராட்சிக்கு பிறகான மக்களாட்சி வடிவங்களால் நவீன காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டத்துக்குட்பட்ட ஆட்சி பிரதேசங்களை குறிக்கப் பயன்படுகிறது. தேசம் என்ற சமஸ்கிருத மூலம் கொண்ட வார்த்தையும் சரி, நாடு என்ற தமிழ் மூலம் கொண்ட வார்த்தையும் சரி பண்டைய பொருள், நவீன பொருள் இரண்டிலும் வழங்கப்படுகின்றன. உதாரணமாக சோழ தேசம் என்றும், சோழ நாடு என்றும் மன்னராட்சி பகுதி அல்லது பேரரசு ஆகியவை குறிக்கப்படுகின்றன. மிகச் சிறிய நிலப்பகுதிகள்கூட நாடு எனப்படுகின்றன. ஆறு நாட்டு வேளாளர் என்ற ஒரு ஜாதியே இருக்கிறது. அதேபோல வைணவத் தலங்களை திவ்ய தேசங்கள் என்று கூறுவார்கள். இதில் ஒரு கோயிலைச் சார்ந்த பகுதியே தேசம் என்று சுட்டப்படுகிறது. அதனால் தேசியம் (Nationalism) என்ற நவீன மக்கள் தொகுதி சார்ந்த சிந்தனையில் கட்டப்படும் நவீன தேசம் (Nation) என்பதையே நாம் இங்கே விவாதிக்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் சில பண்பாட்டு அம்சங்கள் வெகுகாலமாக புழங்கி வரலாம். அவை பல்வேறு மன்னர்களாலும், பேரரசர்களாலும் பின்பற்றப்பட்டிருக்கலாம். அத்தகைய பண்பாட்டு பகிர்வு என்பதை வைத்து நவீன தேசத்தை, பண்டைய காலத்திலேயே தோன்றிவிட்டதாக கருத முடியாது. உதாரணமாக, ஐரோப்பிய நிலப்பகுதி முழுவதும் ஒரு பண்பாட்டு பகிர்வு இருந்தது. கிரேக்கம். லத்தீன் ஆகிய பண்டைய மொழிகளில் உருவான புராணங்கள், இலக்கியங்கள், சிந்தனைகள், தொகுப்புகள் ஐரோப்பிய மன்னராட்சி பகுதிகள் பலவற்றிலும் புழங்கின. அறிஞர் அண்ணா சுட்டிக்காடியபடி கிறிஸ்துவம் ஐரோப்பாவில் பரவிய பிறகு, கிரேக்க புராண கடவுளர்கள் மாஜி கடவுளர்களாக மாறி, இலக்கியத்திலும், இப்போது திரைப்படங்களிலும் மட்டுமே உலவுகிறார்கள். அதன் பிறகு கிறிஸ்துவமும் பல்வேறு வடிவங்களில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு பொது பண்பாடாக ஐரோப்பாவில் நிலவியது. இந்த காரணங்களால் யாரும் ஐரோப்பாவை பண்டைய தேசம் என்று கூறுவதில்லை. உள்ளபடி சொன்னால் நவீன தேசம் என்ற கட்டமைப்பே ஐரோப்பாவில்தான் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உருவானது. அங்கிருந்து வட அமெரிக்காவில் குடியேறிய மக்கள் தொகுதிகள் ஒன்றிணைந்து முதன்முதலாக சட்டரீதியாக ஒரு தேசத்தை 1789ஆம் ஆண்டு உருவாக்கின. அதன் பெயரே ஒருங்கிணைக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்கள், United States of America என்பதுதான். அந்த நேரத்தில் ஃபிரான்ஸில் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியும் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற அரசியல் முழக்கத்தை உலகுக்கு வழங்கியது. ஐரோப்பாவில் உருவான தேசங்களுக்கு இடையிலான போர்கள் இரண்டு உலகப் போர்களாக இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நிகழ்ந்தன. அதன் பிறகுதான் உலகம் முழுவதும் நவீன தேசங்கள் உருவாயின. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய தேசங்கள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியுள்ளன. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவான சோவியத் ஒன்றியம், செக்கோஸ்லோவாகியா, யூகோஸ்லாவியா உள்ளிட்ட நாடுகள் இன்று பல தேசங்களாக மாறியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை பெளத்தம், ஜைனம், சைவம், வைணவம் போன்ற மதங்கள் சார்ந்த பண்பாடுகளும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் பரவியிருந்தன. பின்னர் இஸ்லாமும் அவ்வாறே இந்தியாவின் பல பகுதிகளில் பல வடிவங்களில் வேர் கொண்டது. இவை தவிர எண்ணற்ற நாட்டார் வழிபாட்டு முறைகளும், தெய்வங்களும், நம்பிக்கைகளும் நிலவி வந்தன. ஐரோப்பா போல ஒரு பண்பாட்டு பகிர்தல் இந்திய உபகண்டத்தில் நிலவியது எனலாம். ஐரோப்பா போலவே அரசியல் என்ற அளவில் பல்வேறு பேரரசுகள், சிற்றரசுகள், குறு நில ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதிலும் பல்வேறு காலங்களில் ஆட்சி செலுத்தி வந்தார்கள். இன்று ஒரு தேசமாக கட்டமைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு காலத்திலும் ஒற்றை ஆட்சியில் வந்ததில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் அவ்வாறு இந்தியாவின் பெரும் பகுதி ஓர் ஆட்சிக்குக் கீழ் வந்தது. அதனால் பல்வேறு நவீன தேசங்களாக உருவாவதற்கு முன்னாலேயே ஆங்கிலேய நிர்வாக வசதிக்காக ஆட்சியியல் ஒன்றியமாகக் கட்டமைக்கப்பட்டது எனலாம்.


**மொழிவாரி மக்கள் தொகுதிகள் உருவாக்கியதுதான் இந்திய தேசியம்**
அப்போதுதான் இந்தியாவின் பல மொழி பேசும் மக்கள் தொகுதிகளிலிருந்தும் ஆங்கிலம் படித்தவர்கள் இணைந்து சுயாட்சி உரிமைகள் கோர, காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்கள். காந்தி பெரும் தலைவராக, மகாத்மாவாக உருவெடுத்த பிறகு பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மொழிகளின் ஊடாக வெகுஜன மக்கள் பங்கேற்பு நிகழ்ந்தது. அவ்வாறு உருவான வெவ்வேறு மக்கள் தொகுதிகளின் ஒன்றியமாகவே இந்திய அரசுருவாக்கம் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்தது. ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான இயக்கமும், உணர்வுகளும் வெவ்வேறு மக்கள் தொகுதிகளிடையே வெவ்வேறு தளங்களில் உருவானது. தமிழ்நாட்டில் கட்டபொம்மன் கதைப் பாடல்கள் உருவாயின என்றால், ஆந்திராவில் பொப்பிலி யுத்த கதா உருவாகியது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக படித்தவர்கள், குறிப்பாக இங்கிலாந்து சென்று படித்த, உள்ளூரில் படித்த வக்கீல்கள், வர்த்தகர்கள், பெருந்தனவந்தர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் ஒன்றுகூடி விவாதித்து அரசியலை நிகழ்த்தினார்கள். மாநிலங்களில் உள்ள தலைவர்கள் அந்த அரசியல் செய்திகளை அந்தந்த மொழிகளில் பேசி மக்களைத் திரட்டினார்கள். காங்கிரஸ் கட்சியமைப்பு என்பது பெருமளவு மொழிவாரி மாநிலங்களின் அடிப்படையில்தான் இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு என்ற மாநிலம் திமுக ஆட்சியமைத்த பின் அந்தப் பெயர் சூட்டப்படுவதற்கு வெகுகாலம் முன்னமே காங்கிரஸ் கட்சியின் மாநில அமைப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்றுதான் அழைக்கப்பட்டது.
எனவே இந்தியாவை ஒற்றை மூலம் கொண்ட தேசமாக கற்பனை செய்துகொண்டு மாநிலங்களை அதன் அங்கங்களாக கற்பிப்பது என்பது வரலாற்றுக்கு முரணான, உண்மைக்கு முரணான மொத்தத்துவ கற்பிதம் எனலாம். இந்திய தேசம் என்பது மாநிலங்கள் ஒன்றுபட்டு உருவாக்கிய ஒன்றியம் என்பதுதான் வரலாற்று உண்மை. அதை ஏற்றுக்கொண்டு மாநில சுயாட்சி என்பதை மதிக்கும்போதுதான் இந்திய ஒன்றியம் ஒரு தேசமாக வலுப்பெறும்.
**மத்தியில் ஆட்சியியல், மாநிலத்தில் அரசியல்**
நவீன காலத்தில் மக்களிடையே உருவாகும் கருத்து நிலைகள், கருத்தியல்கள் எல்லாம் முரண்பட்டு விவாதித்து, பல்வேறு அரசியல் அணிகள் உருவாகி, அவையெல்லாம் தேர்தல் களம் கண்டு நிர்ணயிப்பதே நவீன மக்கள் தொகுதிகள். இதை ஆங்கிலத்தில் “பொலிட்டிகல்” என்று முரணியலை உள்ளடக்கிய பெயர்ச்சொல்லாக பாவிக்கின்றனர். “பொலிடிக்ஸ்” என்பது ஒன்றுபடுத்தப்பட்ட ஆட்சியதிகாரத்தை குறிப்பதாகவும், “பொலிட்டிகல்” என்பது மக்களிடையே நிலவும் முரண்பாடுகள் கட்டப்பட்ட ஒரு தொகுதி என்பதை குறிப்பதாகவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் தெளிவு கருதி பொலிடிக்ஸ் என்பதை ஆட்சியியல் என்றும் பொலிட்டிகல் என்பதையே அரசியல் என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் என்பதை நாம் பொலிட்டிகல் அதாவது முரண்களின் மோதல்களான நடைமுறை என்று புரிந்துகொண்டால் அது மாநிலங்களில்தான் சாத்தியம் என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாதி சமூகங்களின் பண்பாட்டு தொகுப்புகளும், முரண்களும் வேறுபட்டவை. ஒவ்வொரு மாநிலத்தின் நிலவியல், நில உடமை வரலாறு, தொழில்மயமாதலின் வரலாறு, உற்பத்தி, நுகர்வு பண்பாடுகளும் மிகவும் வேறுபட்டவை. மொழி என்பது மட்டுமல்ல; அந்த மொழி சுட்டி நிற்கும் வாழ்வியல்களும் வேறுபட்டவை. அதனால் அரசியல் அணியாக்கம், அவற்றின் முரண் என்பது மாநில அளவில்தான் நடைபெற முடியும்.
காங்கிரஸ் கட்சி எப்போது மாநில தலைவர்களின் சுயேச்சையான செயல்பாடுகளை தடை செய்து, ஹை-கமாண்ட் என்ற மேலிட கட்டுப்பாட்டை அதிகரித்ததோ அப்போது அதிலிருந்து கட்சிகள் பிரிந்து மாநிலக் கட்சிகளாக மாறுவது தொடங்கியது. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சனாதன மதம் சூத்திரர்கள் என்று அழைத்த ஜாதிகள், தலித் என்று குறிப்பிடப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதிகள் அரசியல் ரீதியாக அணி திரண்டார்களோ அங்கெல்லாமும் மாநில அரசியல் வலுவானது. இந்தி பேசும் வடமாநிலங்களில் காங்கிரஸ் இந்த போக்குகளால் வலுவிழந்தபோது, இந்து ஆதிக்க ஜாதியினரின் ஆதரவில் மதவாத அடையாளத்தை, இஸ்லாமிய வெறுப்பை அரசியலாக்கி பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆதிக்க ஜாதி, கார்ப்பரேட் சக்திகள் ஆதரவில் அது வட கிழக்கு மாநிலங்களிலும் கால் பதித்தது. ஆனால் பாரதீய ஜனதா கட்சி என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கேற்ப அரசியல் செய்யும் கட்சிதான். அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவிக்க விரும்புவதால், பண்பாட்டு ரீதியாக அது பார்ப்பனீய இந்து மதத்தை இந்தியாவின் அடையாளமாக மீட்டெடுக்க விரும்புவதால் அது தேசிய கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனாலும் அது மாநிலத்துக்குத் தகுந்த அரசியல் அணிகளை உருவாக்கித்தான் தேர்தல்களில் வெல்கிறது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு என்பது குடிமை சமூக விழைவுகள், பெருமுதலீட்டிய நலன்கள் ஆகியவற்றின் சார்பில் ஆட்சியியலை மையப்படுத்தியும், வெகுமக்கள் அரசியலாக மாநிலத்தில் நிலைகொண்டுள்ள அரசியலுடன் பேரம் செய்வதாகவும் விளங்குகிறது.
அதனால் மக்கள் சார்பான வெகுஜன அரசியல் என்பது சமூக நீதி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதிகார பரவலை சாத்தியமாக்க மாநில அரசியல் சக்திகளை அணி திரட்டுவது, ஒன்றிய தேசியம் என்ற வரலாற்றுப் பார்வையை வலுப்படுத்துவது, இந்திய தேசிய நலனுக்கு இன்றியமையாதது. இதற்கு மாற்றாக ஒற்றை மூல, ஒற்றைப் பரிமாண மொத்தத்துவ தேசியத்தை பாரதீய ஜனதா முன்னெடுப்பதும், அதை மக்களிடையே கொண்டு செல்ல மத அடையாளவாத இஸ்லாமிய வெறுப்பரசியலை வளர்ப்பதும் இந்திய தேசிய நலன்களுக்கு எதிரான பிற்போக்கு பயணமாகவே முடியும்.
அந்த வகையில் திராவிட இயக்கம் இந்தியாவின் முற்போக்கு அரசியலின் முகமையாகச் செயல்படுவதும், அதன் அடையாளமாக திமுக கட்சியின் அலுவலகம் தலைநகரில் பல்வேறு எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பங்கேற்று நிகழ்ந்திருப்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வே. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்புகள் வெல்வது இந்தியாவின் முற்போக்கு தேசிய வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது.

**கட்டுரையாளர் குறிப்பு:**

**ராஜன் குறை கிருஷ்ணன் **- பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *