செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கப்படும் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு துறையில் ஆய்வு கூட்டம் இன்று(ஜூலை 22) நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் துறையின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும், கடந்த காலங்களில் செயல்படுத்தபடாத திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ் வளர்ச்சி துறையை ஒரு சிறப்பான துறையாகவும், இத்துறையை தன்னுடைய பொறுப்பில் வைத்திருந்த முத்தமிழறிஞர் கருணாநிதி கண்ட கனவை நனவாக்கக் கூடிய துறையாகவும் மாற்றப்படும். தமிழ் வளர்ச்சி துறையில் கலைஞர் இருந்த காலம் பொற்காலம். அவர்களால் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் இத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு பின்னர், வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலே அறிவிக்கப்படும்.
மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திடுதல், தமிழில் அரசு கோப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளில் தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை உறுதிப்படுத்திட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்படும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் ஒருசில அரசு கோப்புகள் ஆங்கிலத்தில் வந்தாலும்,அதற்கு இணையான மொழிபெயர்ப்புகள் தமிழில் வர வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து கண்காணிக்க தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பல தமிழ் அறிஞர்களின் சிலைகளை முழுமையாக பாதுகாக்க ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், எல்லை காவலர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குரிய உதவிதொகையை தாமதமில்லாமல் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலைஞர் பெயரில் செம்மொழி தமிழ் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஆண்டுதோறும் இலக்கியம், கல்வெட்டு உள்ளிட்டவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களுக்கு கலைஞர் பிறந்தநாளன்று ரூ.10 லட்சம் விருது வழங்கப்பட்டு வந்தன. கடந்த பத்து ஆண்டுகளாக இந்த விருது வழங்கபடாமல் உள்ளது.
இந்த விருதை பெற தகுதியுள்ளவர்களை கண்டறிவதற்கு முதல்வர் குழு ஒன்று அமைத்துள்ளார். இக்குழு, ஆய்வு மேற்கொண்டு முதல்வருக்கு பரிந்துரையை வைப்பார்கள்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்மொழியின் சிறப்பை வரும் தலைமுறையும் தெரிந்துகொள்ளும் வகையில், இந்தத் துறை தொழில்நுட்ப வசதியுடன் தமிழை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செம்மொழி தமிழாய்வு மையம் கொண்டு வந்த பெருமை கலைஞருக்கு தான் உள்ளது. தன்னாட்சி பெற்ற நிறுவனமாகத் தொடர்ந்து, தமிழாய்வு மையம் நீடிக்கும். பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் தனிக் கட்டட பணிகள் முடிவடைந்தவுடன், விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம். இது தொடர்பாக முதல்வர் முடிவு செய்வார்” என்று கூறினார்.
**-வினிதா**
�,